வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மன்னா ரமேஷ்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்படைய பிரதான சந்தேகநபரான “ மன்னா ரமேஷ்யை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கொலை, பாரிய போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தல், மாணிக்கக்கல் சுரங்கங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றுதல் மற்றும் காதலிகள் தொடர்பான தகராறுகள் போன்ற பல வழக்குகளின் கீழ் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் தனது சகோதரனை அடித்து நிரந்தர ஊனமாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய மூவரை சுட்டுக் கொல்லவும் மன்னா ரமேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் டுபாயிலிருந்து 226 என்ற விமானத்தில் விசேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷ் குற்றப் புலனாய்வுத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரிஜனகா தனது மனைவியுடன் காரில் பயணித்த போது டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரி ஒருவர் டுபாய் பொலிஸாருக்கு அளித்த இரகசிய தகவலின்படி, மன்னா ரமேஷ் காரில் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகமடைந்த பொலிஸார் காரை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர்.
டுபாய் பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டு
இருப்பினும், டுபாய் பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவை மீறி மன்னா ரமேஷ் தொடர்ந்து வாகனம் ஓட்டியதால், உள்ளூர் பொலிஸார் காரை விரட்டி சென்று அவரை கைது செய்துள்ளனர்.
காரை சோதனையிட்டதில், அதில் போதைப்பொருள் எதுவும் இல்லை என்றும், மன்னா ரமேஷுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பெற்றிருந்ததால், இலங்கை பொலிஸார் அவரை காவலில் எடுத்துள்ளனர்.
மன்னா ரமேஷை கைது செய்தமை தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்த டுபாய் பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் டுபாய் பொலிஸாருக்கு இடையில் 02 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்திருந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சில தினங்களுக்கு முன்னர் டுபாய் சென்று சட்ட நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை இந்த பாதாள உலக தலைவனை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முதல் மன்னா ரமேஷிடம் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி தடுப்புக் காவலில் வைக்க உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அவிசாவளை, இரத்தினபுரி, தல்துவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் மன்னா ரமேஷ் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை அறிந்ததும், பலர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |