நான் வந்துட்டேன்னு சொல்லு! வோஷிங்டன் சுந்தர் வெளியிட்ட அறிவிப்பு
ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில், நமீபியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக வோஷிங்டன் சுந்தர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்ட காணொளியில், வோஷிங்டன் சுந்தர் ஒரு புகழ்பெற்ற தமிழ் சினிமா வசனமான "நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்பதைப் பேசி தனது வருகையை அதிரடியாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சுந்தர் காயமடைந்தார்.
பக்கவாட்டு தசையில் ஏற்பட்ட காயம்
விலா எலும்பு மற்றும் பக்கவாட்டு தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நியூசிலாந்து தொடரின் எஞ்சிய போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் மீண்டும் அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக வோஷிங்டன் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு தீவிரமான பயிற்சி அமர்வாக இருந்ததுடன் களத்தடுப்பு பயிற்சியுடன், அதிக நேரம் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பயிற்சியின் போது சுந்தர், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். அவர் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடத் தயாராக இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.