கைது செய்யப்பட்ட சிங்கள இணையத்தள ஊடகமொன்றின் ஆசிரியர்! அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை
சிங்கள இணையத்தள ஊடகமொன்றின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவை நீண்டகாலமாக நிலுவையிலிருந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கம்பஹா நீதிவான் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் கைது
சுமார் 16 வருடங்கள் வெளிநாட்டில் வசித்து வந்த சந்தருவன் சேனாதீர, கடந்த மார்ச் 11, 2026 அன்று இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு கம்பஹா தலைமை நீதிவான் காவிந்த்யா நாணயக்காரவினால் சர்வதேசப் பொலிஸார் ஊடாக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வழக்கில் சந்தருவன் சேனாதீர ஒரு தரப்பினர் அல்லர் எனக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல்
இதனையடுத்து, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது. 2010 ஆம் ஆண்டு லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த அச்சுறுத்தல்கள் காரணமாக சந்தருவன் சேனாதீர இலங்கையை விட்டு வெளியேறினார்.

அவர் வெளிநாட்டிலிருந்து செய்திகளை வெளியிட்டு வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு அவரது ஊடக அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 16 வருடங்களுக்குப் பிறகு அவர் இந்த மாத தொடக்கத்தில் முதல்முறையாக இலங்கை திரும்பியமை குறிப்பிடத்தக்கது.