கைது நடவடிக்கைக்கு எதிரான அண்ட்ரூவின் வழக்கு: எப்ஸ்டீனுக்கு வழங்கப்பட்ட அரசின் இரகசிய ஆவணங்கள்
பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட்பேட்டன் - வின்ஸர் கடந்த பெப்ரவரி மாதம் தனக்கு எதிராகப் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட தேடுதல் உத்தரவுகளின் சட்டபூர்வத்தன்மையை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான நீதிமன்ற விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகப் பிரித்தானிய நீதித்துறை அறிவித்துள்ளது.
கைது நடவடிக்கை
அண்ட்ரூ 2001 முதல் 2011 வரையிலான காலப்பகுதியில் வர்த்தகத்திற்கான சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை கசியவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த பெப்ரவரி மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தேடுதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் அண்ட்ரூ தொடர்ந்துள்ள சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தேம்ஸ் வேலி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இந்த விசாரணை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளமை பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.