கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் பலி
மிரிஹான அத்துல்கோட்டே சந்தியில் கட்டிடப் பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லக்ஷ்மன் சரத் குமார என்ற 63 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடைகளில் கூலி வேலை செய்யும் நபர்
தீ ஏற்படும் போது இந்த நபர் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்தாகவும் அவர் உறங்கிக்கொண்டிருந்த இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இந்த நபர் பிரதேசத்தில் இருக்கும் கடைகளில் கூலி வேலை செய்து வந்தவர் எனவும் சுகவீனமான நிலைமையில் இருந்த அவருக்கு கடை உரிமையாளர் தங்குமிட வசதியை வழங்கி இருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
தீ விபத்துக்கான காரணம் நுளம்பு சுருளா அல்லது மின் ஒழுக்கா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. தீ விபத்து காரணமாக கடை முற்றாக எரிந்துள்ளதுடன் ஏற்பட்ட நஷ்டம் இதுவரை கணக்கிடப்படவில்லை.
தீபரவியதை அடுத்து அங்கு சென்ற கோட்டே நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் மின்சார சபை ஊழியர்கள் மின் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மேலும் நீதவான் விசாரணைகளும் நடைபெறவுள்ளன.



