அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இருவருக்கு வழங்கப்பட்ட கௌரவிப்பு!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிறயன் லாரா (Brian Lara) ஆகியோரை அவுஸ்திரேலியா - சிட்னி கிரிக்கெட் மைதானம் (Sydney Cricket Ground) கௌரவித்துள்ளது.
அதன்படி, சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் உள்ள இரண்டு வாயில்களுக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், பிறயன் லாரா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
டெண்டுல்கரின் 50ஆவது பிறந்த நாளையும் சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் லாரா குவித்த முதலாவது டெஸ்ட் சதத்தின் 30 ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்றைய தினம் (24.04.2023) அவர்களது பெயர்களில் சிட்னி கிரிக்கெட் அரங்க நுழைவாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
லாரா-டெண்டுல்கர் கேட்ஸ்
1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், லாரா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை சிட்னி கிரிக்கெட் அரங்கில் பெற்றுள்ளார். குறித்த போட்டியில் அவர் ஆட்டம் இழக்காமல் 277 ஓட்டங்களைக் குவித்துள்ளார் என்பது சிறப்பு.
அத்துடன், சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடியுள்ளமையும் அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 241 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இங்கு அவரது துடுப்பாட்டம் சராசரி 157 ஆகும்.
மேலும், வருகை தரும் அனைத்து வீரர்களும் இப்போது புதிதாகப் பெயரிடப்பட்ட லாரா-டெண்டுல்கர் கேட்ஸ் வழியாகக் களம் இறங்குவார்கள்.
பெருமை அடைகின்றோம்
இது குறித்து டெண்டுல்கர் கூறியுள்ளதாவது, 'இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானமே தனக்கு மிகவும் பிடித்தமானது. மேலும், எனது பெயரிலும் எனது நல்ல நண்பன் லாராவின் பெயரிலும் திறக்கப்பட்டுள்ள நுழைவாயிலை விருந்தினர் அணிகளின் வீரர்கள் பயன்படுத்தவுள்ளமை தங்களுக்கு கௌரவத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாரா தெரிவித்துள்ளதாவது, 'சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எனக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையிட்டு பெருமை அடைகின்றேன்.
என்னைப் போன்றே சச்சினும் பெருமை அடைந்திருப்பார். இந்த மைதனாம் மறக்க முடியாத நிகழ்வுகளை எனக்கும் எனது குடும்பத்திற்கும் தந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.