சர்வதேச வலுசக்தி நெருக்கடி: கட்சித் தலைவர்களுடன் அநுர அவசர ஆலோசனை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் (20.03.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய வலுசக்தி நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அவசர நடவடிக்கை
மத்திய கிழக்கின் தற்போதைய பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக அளவில் எழுந்துள்ள எரிசக்தி தட்டுப்பாடு, இலங்கையின் வலுசக்தித் துறை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய நேரடித் தாக்கங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

இந்த நெருக்கடி நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக அரசு தற்போது எடுத்துள்ள அவசர நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.