அமெரிக்கப் படைகள் மீது நள்ளிரவு தாக்குதல்: நேட்டோ படைகள் வெளியேற்றம்
ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விக்டரி பேஸ் இராணுவத் தளத்தைக் குறிவைத்து அடுத்தடுத்து நான்கு ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்கள் நேற்று(20.03.2026) நள்ளிரவு முதல் இன்று(21.03.2026) அதிகாலை வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு ட்ரோன் தளத்தின் பின்புற வாயிலில் மோதி தீ விபத்தை ஏற்படுத்தியதாகவும், மற்றொரு ட்ரோன் ஆர்.பி.ஜி (RPG) ரக ஏவுகணையை வீசித் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பக்தாத்தின் உட்பகுதிகளான அபு கிரைப் மற்றும் டோரா போன்ற இடங்களிலிருந்து இந்த ட்ரோன்கள் ஏவப்பட்டது பாதுகாப்பு அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பக்தாத் மட்டுமன்றி, வடக்கு ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இதற்குப் பதிலடியாக ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த மோதல்களில் சிக்கிக்கொள்ள விரும்பாத நேட்டோ கூட்டணி நாடுகள் ஈராக்கிலிருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன.
தங்களுக்குத் தொடர்பில்லாத இந்த வலய மோதலில் தங்களது வீரர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே இந்த வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.