மணிவண்ணன் குழு நினைவேந்தலை குழப்புவதற்கான சதியை மேற்கொண்டது: சுகாஷ் (Video)
பொன்மாஸ்டர் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகி 4வது நாளில் ஈ.பி.டி.பியின் ஆதரவில் உள்ள மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் மற்றும் அவரது குழு, நினைவேந்தலை குழப்புவதற்கான முதலாவது சதியை மேற்கொண்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச புலனாய்வுப் பிரிவினரின் இயக்கத்தில் இயங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் சில வேற்று நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை மேற்கொள்ளும் தரப்பினரால் நினைவேந்தலை குழப்புவதற்கு பல்வேறுபட்ட சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபத்தின் ஆத்மா சரியான வழிமுறையை நடத்தியதால் அவர் நினைவுகூரப்பட்டார்.
உலகத்திற்கு அஹிம்சையை கற்பித்த காந்தி அவர்களது தேசத்தை நோக்கி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீதியை கேட்டு அண்ணன் திலீபன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தார்.
தமிழர்களுடைய அபிலாசைகளை முன்வைக்கின்ற ஒரு இடமாக, தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தினை பார்க்காமல் தமிழ்த் தேசிய அரசியலை நீக்கம் செய்து இந்தியாவிற்கு இருக்கின்ற வரலாற்று கடமையை தட்டிக் கழிக்கின்ற ஒரு சதிதான் இங்கு நடந்துகொண்டு இருக்கிறது.
தியாக தீபத்தின் நினைவேந்தல் இடத்தில் அவரது அபிலாசைகளை கதைப்பது தான் முக்கிய கடமை.
உண்மையில் என்ன நடந்தது என்பதை விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
அடக்கு முறைகள்
கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்ட போது தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னெடுக்க எவரும் வரவில்லை.
இன்று தியாக தீபத்தை நினைவேந்துவதற்கு அடக்குமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக காட்டப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பலர் அடிபடுகின்றார்கள்.
மதத் தலைவர்கள் சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய அமைப்புகளே பொதுக்கட்டமைப்பை பற்றி பேச வேண்டும்.
ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் இருக்கின்ற யாழ். மாநகர சபை முதல்வர் எவ்வாறு பொதுக் கட்டமைப்பு பற்றி பேசலாம்.
தியாக தீபத்தின் நினைவேந்தல் வழமையாக, அவர் உயிர்நீத்த நேரமான 10.48க்கு அனுஷ்டிக்கப்படும்.
நேற்றுமுன் தினம் (26.09.2022) நினைவேந்தல் செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இடத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவில் உள்ள மணிவண்ணன் தரப்பினை சேர்ந்த ஜெயபாலன் என்பவர் முண்டியடித்துக் கொண்டு நல்லூரிலே 10.47 மணிக்கு தீபம் ஏற்றிருக்கின்றார்.
அதன் பின்னர் புதிய நேரத்தில் பாரம்பரிய நினைவேந்தல் குழுவினர் சரியாக 10.48 மணியளவில் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளனர்.
இங்கே நினைவேந்தலை குழப்பியது யார் என கேள்வியெழுப்பியுள்ளார்.
தன்னிலை விளக்கம் தெரிவித்த பார்த்தீபன்
இதன் போது தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நாம் அமைதியாகவே இருந்தோம் என யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தன்னிலையை தெரிவித்துள்ளார்.
திலீபன் நினைவிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
திலீபன் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதத்தின் முடிவில் மாலை நேர நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
வசைபாடிய கஜேந்திரகுமார் அணி
நினைவேந்தல் முடிவில் வீடு செல்ல ஆயத்தமாக நின்றிருந்தோம். அப்போது யாழ். பல்கலைக்கழக பணியாளர் வீரா அருகில் நின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணியின் உறுப்பினர்கள் சிலர் வீரா மீது தூரோகி, ஒட்டுக்குழு போன்ற வார்த்தைகளைக் கொண்டு வசைபாடினார்கள்.
ஒரு வார்த்தைகூட பேசமால் பொறுமையாக இருந்த வீரா அங்கிருந்து விலகிச் சென்று தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு செல்ல முற்பட்ட போது அவர்கள் ஒட்டுக்குழு, ஈ.பி.டி.பி என்று மீண்டும் அவரைப் பார்த்து கத்தினார்கள்.
பின்னர் அவ்விடத்தில் நின்ற என்னையும் சி.தனுஜனையும் ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என்று உரக்க வசைபாடினார்கள்.
என்ன என்று நான் அவர்களிடம் கேட்ட போது அவர்கள், நீங்கள் இந்த இடத்தில் நிற்பதற்குத் தகுதியற்றவர்கள்.
நீங்கள் ஒட்டுக்குழுக்கள். இதை விட்டு வெளியேறுங்கள் என்று மிரட்டினார்கள். அப்போது நான் இந்த இடத்தை விட்டு எங்களைப் போகச் சொல்லுவதற்கு நீங்கள் யார் என்று வினாவினேன்.
அதற்கு என் மீதும் தனுஜன் மீதும் தாக்குதல் நடத்த அவர்கள் முனைந்தனர். ஆனால், அதனை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக உறுப்பினர்கள் தடுத்துவிட்டனர்.
ஏற்பட்ட குழப்பங்கள்
இந்நிலையில், எங்களுடன் முரண்பட்டவர்களிடம் கேள்விகளைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்களுடனும் அவர்கள் முரண்பட்டார்கள்.
அங்கிருந்த அனைத்து பொதுமக்களும் வலிந்து பிரச்சினைகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடக்கின்றார்கள் என்று அவர்களைப் பேசினார்கள்.
நடந்த சம்பவம் இவ்வாறிருக்கையில் ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியின் பிரகாரம் இரு தரப்பும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக உள்ளது. ஆனால், உண்மையில் நாங்கள் அந்த இடத்தில் அமைதியாகவே இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்தி: ராகேஷ்