நாயாற்று பகுதியில் தடைப்பட்டுள்ள போக்குவரத்து.. முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை
டித்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாயாறு பால திருத்த பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதனால் மக்களுக்கான போக்குவரத்து 21 நாளாக தடைப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாத இறுதிப்பகுதியில் வீசிய புயல் மற்றும் மழைவெள்ளத்தினால் மாவட்டத்தில் முக்கிய பாலமாக காணப்படும் நாயாற்று பாலத்தின் இரு பாலங்கள் உடைப்பெடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான B 297 தர வீதியாக இது காணப்படுகின்றது. முல்லைத்தீவு - கொக்கிளாய் வரையான இந்த வீதியில் முக்கிய பாலமாக நாயாற்று பாலம் அமைந்துள்ளது.
இந்த பாலம் வழியான போக்குவரத்து நேற்று (18) வரை முற்றாக தடைப்பட்ட நிலையில் பாலத்தின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுவதால் மக்களை படகில் ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடற்படையினர் சேவையில்
புயலால் சேதமடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தினை திருத்தும் நடவடிக்கை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் பொறியில் பிரிவினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளர்கள்.

அந்த பணி கடந்த 17ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் சேதமடைந்த இரண்டாவது பாலத்தினை அகற்றும் நடவடிக்கை நேற்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் அகற்றி பொருத்துவதற்கு சுமார் பத்து நாட்கள் ஆகலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதுவரையில் மக்கள் படகு வழி பயணத்தினையே மேற்கொள்ள வேண்டிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாயாறு கடற்படைத்தளத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், இந்தபாலம் சேதமடைந்த காலம் தொடக்கம் மக்கள் மற்றும் உந்துருளிகளை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதற்காக 10 படகுகளை சேவையில் ஈடுபடுத்தி வருகின்றார்கள். சுமார் 40 வரையான ஆண் பெண் கடற்படை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடந்த 21 நாட்களில் 8ஆயிரம் மக்களுக்கு சேவை வழங்கியுள்ளதாகவும் 800 வரையான உந்துருளிகள் ஏற்றி இறக்கியுள்ளதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.









நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri