யாழில் தியாகி திலீபனின் நினைவிடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட சிலர் (Video)
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்ததாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது, தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதேவேளை கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து திலீபனின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்து நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அமளி துமளிக்குள் மத்தியில் சுடர் ஏற்றிய பின்னரே ஒலிபெருக்கியில் இரு நிமிட அகவணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தொடர்ந்தும் அமைதியின்மை காணப்பட்டமையால், வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது, காங்கிரஸினர் தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த காங்கிரசினரின் தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது.
அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் தீபத்தின் சூடான எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து அவர் நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
தியாகதீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய நிவேந்தல் நிகழ்வை மாபெரும் உணர்வெழுச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
திரண்டுள்ள பெருமளவு மக்கள்
இந்த நிலையில் பெருமளவு மக்கள் திரண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.
பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனி காலை 10 மணி முதல் நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்த வண்ணம் இருந்தன.
அதேவேளை கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்குக்காவடி எடுத்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.