கடற்றொழிலாளர்களின் வலையில் சிக்கிய எட்டு அடி நீளமான முதலை
திருகோணமலை - சீனக்குடா கொட்பே பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களின் வலையில் உயிருடன் முதலை ஒன்று சிக்கியதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சீனக்குடா கொட்பே பிரதேசத்தில் இன்று (26) பிற்பகல் கடற்றொழிலாளர்களினால் இழுக்கப்பட்ட கரை வலையிலேயே இவ்வாறு 8 அடிக்கும் அதிக நீளமான முதலை ஒன்று சிக்கி கொண்டதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சிக்கிய முதலை குறித்த கடற்தொழிலாளர்கள் கரை வலை இழுக்கும்போது வலையில் மாட்டியதாகவும் பின்னர் கரைவலையின் மடிப்பகுதியில் சிக்கி பெரும் சிரமத்திற்கு மத்தியில் குறித்த மீனவர்களினால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கயிற்றால் கட்டப்பட்டு பின்னர் திருகோணமலை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.
பின்னர் திருகோணமலை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வருகை தந்த அதிகாரிகள் குறித்த முதலையை கண்ணியா - பெரியகுளம் பிரதேசத்தில் குளத்தில் விடுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
இவ்வாறு குறித்த கடற்கரை பிரதேசத்தில் அன்றாடம் தொடர்ச்சியாக கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இவ்வாறு இரண்டு தடவைகள் முதலைகள் கரை வலையில் சிக்குவதாகவும் இதனால் தமது வலைகள் பெரிதும் சேதமடைவதாகவும் கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



