அம்பாறை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலாளருடன் விசேட கலந்துரையாடல் (Photos)
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் எரிபொருள் பிரச்சினை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை முன்னிறுத்தி அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கடலரிப்பு
இதன்படி கலந்துரையாடலில், அம்பாறை மாவட்ட ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறித்த கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட விதங்கள் தொடர்பிலும் மக்களின் சொத்துக்கள் கடலலையில் காவு கொள்ளப்பட்டுள்ளதையும், இதனால் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்களையும் ஜனாதிபதி செயலாளருக்கு எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் இந்த அனர்த்தத்தின் அவசர நிலை கருதி மிக விரைவாக முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளருடன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் எடுத்துரைத்து அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பிரச்சினை
இதனையடுத்து எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை சந்தித்து விசேட கலந்துலையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட கடற்தொழிலாளர்கள் மற்றும் பெரும்போக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எரிபொருள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சில மீன்பிடித்துறைமுகங்களிடமிருந்து அப்பிரதேச ஒவ்வொரு மீன்பிடி படகுக்கு 50 லீட்டர் டீசல் வழங்கபடுகின்றது ஆனால் அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கு கிடைப்பதில்லை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





