நாடளாவிய ரீதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு (Photos)
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீட்டில் திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக
அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய சம்பவ தினத்தன்று வீட்டின் யன்னல் கதவை உடைத்து அறையிலுள்ள அலுமாரியில் இருந்த அங்கிருந்த 6பவுண் தங்க நகைகள் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிகணணி, மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
யாழ். வடமராட்சி - மந்திகை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் திருட்டு சம்பவம் ஒன்று நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டு சம்பவத்தில் சுமார் 70 ஆயிரம் பெறுமதியான உணவு பொருட்கள், மற்றும் பணம் என்பன காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பருத்தித்துறை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அம்பாறை
சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் மற்றும் மின் உபகரணங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களை காரைதீவு பொலிஸார் இன்று(22) கைது செய்துள்ளனர்.
அம்பாறை - காரைதீவு பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் உள்ள உருக்கு இரும்பு தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இதற்கமைய தொழிற்சாலை உரிமையாளரால் இந்த சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க தலைமையிலான குழுவினரால் விசாரணைகள் முன்னனெடுக்கப்படுகின்றது.
இதன்போது கொள்ளைச் சம்பவத்தினுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இனங்காணப்பட்ட நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்ட ஏனைய நால்வர் இனங்காணப்பட்டு இன்று காரைதீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பல வருடங்களாக தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பெறுமதியான மோட்டார், உபகரணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது எனவும் சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் யாவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
