முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை சாள்ஸ் மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் (Photos)
முல்லைத்தீவு - அம்பலவன் பொக்கணையில் மாவீரர் நாள் நினைவு செயற்பாடுகள் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
உலகெங்கிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் துயிலும் இல்லங்களிலும் நினைவு கொள்ளும் இடங்களாக தெரிவாகிய விசேட இடங்களிலுமாக இறுதிநாள் நிகழ்வுகளை உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்க ஈழவுணர்வாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
சாள்ஸ் மண்டபத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள்
அம்பலவன்பொக்கனைச் சந்தியில் சாள்ஸ் மண்டபம் அமைந்திருந்த இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று தங்கள் பிள்ளைகளை நினைவு கூர முடியாத மாவீரர் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்காக இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஏற்பாட்டுக்குழு சார்பாக பேசியவர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னரும் காவியமான மாவீரர்களை நினைவு கொள்ளும் வகையில் சாள்ஸ் மண்டபத்தில் நினைவுகூரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மாத்தளன், புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை,வலைஞர்மடம் ஆகிய இடங்களில் வாழ்ந்து வரும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோர் மாவீரர்களுக்கான நினைவஞ்சலியைச் செலுத்துவதற்காகவும் கார்திகை 27 அன்று தீபமேற்றி மாவீரர்களை நினைவு கொள்ளவும் ஏற்பாடுகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழுணர்வாளர்களின் செயற்பாடுகள்
தமிழர்கள் எதிர்கொண்ட சொல்லணாத் துயரங்களில் இருந்து அவர்களை விடுவிக்க தாயகக் கனவோடு களமாடி உயிர்க் கொடை செய்த மானமா வீரர்களை நினைவு கூறுதல் தங்கள் தலையாய கடமை என கூறிய தமிழுணர்வாளர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகளால் சாள்ஸ் மண்டபத்தில் இம்முறை மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகளை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏற்பாடாகி வருகிறன.
இறுதிப் போரின் போது தமிழர்கள் பெரும் இன்னல்களை சந்தித்த இடமாக புதுமாத்தளன் அம்பலவன்பொக்கனை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்கள் விளங்குகின்றன.
இந்த இடங்களில் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்தல் சாலப் மொருத்தமானதாக இருக்கும் என அப்பகுதியைச் சேர்ந்த தமிழுணர்வாளர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியவாறு செயற்பட்டுவருவதனை அவதானிக்க முடிந்தது.
அரசியல் சார்ந்து மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதனை தாம் தவிர்க்க விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்மையும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



