இலங்கையிடம் கோடிக்கணக்கான ரூபாவை பெற்ற அமெரிக்க தொழிலதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அமெரிக்காவில் இலங்கையின் செல்வாக்கை மேம்படுத்திக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி மூலம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்திய ஒரு அமெரிக்க தொழிலதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் பிரசார நிதி மீறல்கள் ஆகியவற்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர்- இமாத் சுபேரி, இலங்கையின் வரி செலுத்துவோர் சார்பாக தமக்கு வழங்கப்பட்ட பணத்தில், 5.6 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது அதில் 87 சதவீதத்தை தனக்கும் தமது மனைவிக்கும் செலவிடப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுபேரி மேற்கொண்ட வங்கிக் கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் அவர் ஏய்ப்பு விடயங்களில் ஈடுபட்டமைக்கான காரணங்களை அமெரிக்க புலனாய்வு சேவையினர் கண்டறிந்த நிலையிலேயே அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே சுபேரி இலங்கை வரும் போது அவர் இலங்கையில் பொழுதைக் கழிப்பதற்காக விசேட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.