ஹபரணையில் ஆம்புலன்ஸ் வண்டி விபத்து: ஏறாவூர் நகர சபை உறுப்பினர் உட்பட நால்வர் படுகாயம்
ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஆம்புலன்ஸ் வண்டியொன்று, ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும் கூட்டுறவுச் சங்கத் தலைவர் உட்பட நால்வர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து, இன்று (25.01.2026) அதிகாலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
விபத்து
ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க வைத்தியசாலைக்குச் சொந்தமான குறித்த ஆம்புலன்ஸ் வண்டி, இன்று(25) அதிகாலை தம்புள்ளை - ஹபரணை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த பின்வரும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஏறாவூர் நகர சபை உறுப்பினரான அல்ஹாபிழ் உவைஸ், சக்கூர் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் முகம்மது சக்கூர், அவரது மனைவி, ஆம்புலன்ஸ் சாரதி முகம்மது அஸீம் ஆகியோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அதிகாலை வேளையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாகவும் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.