நீண்ட தூரம் எரிவாயு, எரிபொருளுக்கான வரிசை : மக்கள் விசனம் (Video)
அம்பாறை
அம்பாறை - நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக இன்று(25) அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பித்துள்ள எரிவாயு கொள்வனவு காண வரிசையில் கடற்கரை வீதியில் சென்று சுமார் 200 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் இன்னும் இந்த இடத்திற்கு எரிவாயு வந்து சேரவில்லை எனவும் அங்குள்ள மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு
பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் சீராக வழங்கப்பட்டுவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸின் முயற்சியினால் இன்று இடம்பெற்றது.
லிட்ரோ எரிவாயு விநியோகம் மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 700 கொள்கலன்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.
எரிவாயுக் கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்த நிலையில் மக்கள் அதிகம் காணப்பட்டுள்ளதால் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தலைமையிலான பொலிஸாரின் பாதுகாப்புடன் எரிவாயு விநியோகம் இடம்பெற்றுள்ளது.
செய்தி: நவோஜ்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் சமையல் எரிவாயு குடும்ப பங்குகீட்டு அட்டை மற்றும் உணவகங்களுக்கு கடை அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அதிகாலை 3.00 மணிக்கு வருகைதந்தமையால் சமையல் எரிவாயுவினை பெறமுடிந்தது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் நிலையத்தின் முன்பாக பலர் சமையல் எரிவாயுவினை பெறமுடியாதநிலை காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குடும்ப பங்குகீட்டு அட்டை இல்லாமை, கடை அனுமதிப்பத்திரம் இல்லாமை, புதிய திருமணம் முடித்தவர்கள் என பலரும் சமையல் எரிவாயு பெறமுடியாத நிலை எற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் இன்று (25) மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றுள்ளது. ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
பளை பிரதேச செயலக உத்தியோகத்தரின் கண்காணிப்பில் ஆள் அடையாள அட்டை மற்றும் குடும்ப பங்கீட்டு அட்டை பதிவு செய்தே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்தில் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி :யது
வவுனியா
வவுனியா மாவட்டத்திலும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக இன்றும் (25 ) மக்கள் பல மணிநேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்திருந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பல எரிபொருள் நிலையங்களில் மண்ணெண்ணெய் நிறைவடைந்துள்ள போதிலும், மாவட்டத்தின் இரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு 1000 ரூபாவிற்கு என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த எரிபொருள் விற்பனை நிலையங்களின் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேலும், எரிவாயு லிட்ரோ கொள்கலன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே வழங்கப்படுவதுடன், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோக முகவரினால் இன்று 40 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதிகாலை 4.30 மணி தொடக்கம் மக்கள் காத்திருந்து காலை 10.30 மணியளவில் எரிவாயுவினை பெற்றுள்ளனர்.
இதனால் அரச உத்தியோகத்தர்கள், மற்றும் நாளாந்த வேலைக்கு செல்வோர் என பலரும் நீண்ட நேரம் காத்து நின்று அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதால் உரிய நேரங்களுக்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி : திலீபன்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு கொள்கலன் திருடப்பட்டுள்ளது.
நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு கொள்கலன் திருடப்பட்டதாகவும் எரிவாயு கொள்கலன் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு கொள்கலனை வீட்டின் வெளியே பொருந்தியிருந்த நிலையிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நீதிமன்ற காவலில் இருந்த பொலிஸாரிடம் வினவியபோது தமது கடமை நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாக தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பல திருட்டு கொள்ளை கொலை என பல சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நுவரெலியா
நுவரெலியா டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நுவரெலியா பிரதேச தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இதனால் தூரப் பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். “அப்பி பாரே, கோட்டா கெதரே” என கோஷங்களும் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிலையங்களில் உரிய முறையில் தமக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமக்கு எரிபொருள் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழங்கப்பட வேண்டும் என பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள சாரதிகளும், நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா சாந்திபுர, மிபிலியான, ஹாவா எலிய, பொரலாந்த, ராகல, நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய இடங்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நுவரெலிய தலைமையக பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
செய்தி : திருமால்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றுநடைபெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று(25-03-2022) மதியம் 12.00மணிக்கு மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தற்போதுள்ள சூழ்நிலையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் களநிலவரங்களை ஆராய்ந்து மக்களுக்கு இலகுவன வழியில் அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, பிரதேச செயலாளர்கள், கூட்டுறவு உதவி ஆணையாளர், முல்லைத்தீவு மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமையாளர், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், மாவட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், மாவட்டத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் முதலானோர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி :யது