மண்முனை தென் எருவில்பற்று சபை அமர்வில் அமளிதுமளி
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று சபையின் அமர்வில் இன்று அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று சபையின் விசேட அமர்வு இன்று உதவி தவிசாளர் க.ரஞ்சினி தலைமையில் நடைபெற்றது.
சம்பிரதாயபூர்வமாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
இதன்போது பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கடின பந்து விளையாடுவதற்கான தடையினை நீக்குமாறு மண்முனை தென் எருவில் பற்று சபையின் உறுப்பினர் சோ.வினோராஜ் முன்மொழிவினை முன்வைத்ததை தொடர்ந்து சபையில் இது தொடர்பில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
குறித்த விளையாட்டு மைதானத்தில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை காரணமாக அப்பகுதி இளைஞர்களின் விளையாட்டு திறமைகள் மழுங்கடிக்கப்படுவதாகவும், குறித்த தடையினை நீக்க வேண்டும் எனவும் இதன்போது வினோராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் ஆலய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள நாகதம்பிரான் ஆலய நிர்வாகமும், அருகில் உள்ள மக்களும் குறித்த விளையாட்டு மைதானத்தில் கடினபந்து விளையாடுவதால் தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளதாக பிரதேச சபைக்கு அறிவித்துள்ளதால் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறித்த தடையினை நீக்க நடவடிக்கையெடுக்குமாறு மண்முனை தென் எருவில் பற்று சபையின் பெரியகல்லாறு வட்டார உறுப்பினர் எஸ்.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சபையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
பல வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் சபையின் தொழில்நுட்பக்குழுவினை உடனடியாக அனுப்பி மைதானம் தொடர்பில் ஆய்வு செய்யவும் மைதானம் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பித்தவர்களை சந்தித்து நிலைமையினை அறியவும் தீர்மானிக்கப்பட்டதுடன்,இறுதி தீர்மானத்தினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட அமர்வினைக்கூட்டி தற்காலிக தடையினை நீக்குவது குறித்து தீர்மானம் எடுப்பது எனவும் இதன்போது பிரதி தவிசாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த பிரச்சினைக்கு முற்றுவைக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய விடயங்கள் ஆராயப்பட்டதுடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
