இந்தியாவில் மாற்று எரிபொருள்- வாகன விற்பனை தீவிரம்
இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் 40.59% மாற்று எரிபொருள் வாகனங்களாக பதிவாகியுள்ளன.
E20 பெட்ரோல் அறிமுகம்
இது பெட்ரோல் வாகனங்களின் விற்பனைப் பங்கான 41.68 சதவீதத்திற்கு மிகவும் நெருக்கமான அளவாகும். முந்தைய E10 பெட்ரோலுக்குப் பதிலாக E20 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய ரக வாகனங்களின் எஞ்சின் செயற்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம் பாதிக்கப்படுவதாகப் பயனாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாகப் புதிய பெட்ரோல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்கும் நுகர்வோர், மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இருப்பினும், E20 பெட்ரோல் தொடர்பாகப் பரவும் தவறான தகவல்களே இந்த அச்சத்திற்குக் காரணம் என்றும், இது தொடர்பில் வாகன உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.