ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுவரிச்சட்டத்தை மீறி, மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்ததன் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண்டியை சேர்ந்த மதுபான சில்லறை வர்த்தகர்களான சாமர சம்பத் அபேசேகர மற்றும் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பல மதுபான உரிமங்கள்
முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி, நிதி அமைச்சின் செயலாளர், அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 39 பேரின் பெயர்கள் பிரதிவாதிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் செப்டம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், பிரதிவாதிகள் மதுவரிச் சட்டத்தை மீறி பல மதுபான உரிமங்களை வழங்கியுள்ளனர் என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுவரிச் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும், அநீதியான முறையிலும் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் கீழ், கடந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மதுபான உரிமங்களைப் பெற்றுள்ளனர்.
அதேநேரம் முறையான வெளிப்படைத்தன்மையின்றி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவு
இதேவேளை, பொதுச் சட்ட நடைமுறைகளின்படி அரசாங்கத்திற்கு, குறித்த மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையின்போது, ஒருவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது எனினும் சட்டவிரோதமான முறையில் இந்த மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் கணிசமான அளவு வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்தநிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரையில் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனுவின் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
மேலும், குறித்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
அத்துடன், இந்த நடவடிக்கையின் மூலம் கலால் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |