டிஜிட்டல் திரைகள் காரணமாக சிறுவர்களுக்கு உருவாகியுள்ள பாதிப்பு
டிஜிட்டல் திரைகளை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் 30 சதவீத சிறுவர்கள் கிட்டப்பார்வை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2050ல் 50 சதவீதமாக உயரும் என உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் கண் மருத்துவர் அனுசா தென்னேகும்புர கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்
குழந்தைகளின் கண் ஆரோக்கியம்
எனவே குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை கண்காணிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நீண்டகால சிக்கல்களைத் தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியலாளரான ஸ்வர்ணா விஜேதுங்க, அதிகப்படியான திரைப் பயன்பாடு கண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக இந்த நிகழ்வின்போது குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை கருதி, 18 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ளவர்களுக்கான திரை நேரம் பெற்றோரின் கண்காணிப்புடன், தினசரி அதிகபட்சம் ஒரு மணிநேரமாக வரையறுக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்
இதற்கிடையில், திரைகளில் தங்கியிருப்பதை விட, தரமான நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் விளையாட்டுக்களில் செலவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |