முல்லைத்தீவில் முன்னணி விளையாட்டு வீரர்களை புறக்கணிப்பது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் (Mullaitivu) அலையோசை கழக முன்னனி விளையாட்டு வீரர்களை வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தினர் புறக்கணித்தமை தொடர்பில் விளையாட்டு ஆர்வலர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டத்தில் முன்னனி விளையாட்டுக் கழகங்களாக அலையோசை விளையாட்டுக் கழகமும் செந்தமிழ் விளையாட்டுக் கழகமும் உள்ளன.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைக்கப்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுத்தொடர் ஒன்றினை செந்தமிழ் விளையாட்டுக் கழகம் நடத்தியிருந்தது. இந்த உதைபந்தாட்ட போட்டியின் போது உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டுக் கழகமும் அழைக்கப்பட்டிருந்தது.
மறுக்கப்பட்ட அனுமதி
போட்டி நடைபெறவுள்ள தினத்தில் வற்றாப்பளையில் அமைந்துள்ள செந்தமிழ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கூடியிருந்த போது அலையோசை விளையாட்டுக் கழகத்தின் அன்றைய போட்டியில் விளையாடவிருந்த அணியின் அங்கம் வகித்த முன்னனி விளையாட்டு வீரர்கள் ஐவரை உதைபந்தாட்ட போட்டியில் அணிக்காக பங்குபற்ற அனுமதிக்க முடியாது என செந்தமிழ் விளையாட்டுக் கழகம் மறுத்திருந்ததாக அலையோசை விளையாட்டுக் கழகம் சார்பாக பேசியிருந்தவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஐந்து வீரர்களும் கழகத்தின் விளையாட்டு அணியின் முன்னனி விளையாட்டு வீரர்கள்.
இந்நிலையில் இவர்களை விளையாடுவதற்கு அனுமதி மறுத்தமைக்கான காரணம் என்ன என்பதை உத்தியோகப்பூர்வமாக எடுத்துரைக்க செந்தமிழ் விளையாட்டுக் கழகம் மறுத்துவிட்டது.
இது தொடர்பில் அனுமதி மறுத்தமைக்கான காரணத்தினை உத்தியோகப் பூர்வமாக தருமாறு கேட்ட போது செந்தமிழ் விளையாட்டுக் கழகம் தர மறுத்திருந்தது.
அலையோசை விளையாட்டுக் கழக தலைவரும் இதர உறுப்பினர்களும் சம்பவ இடத்தில் குழுமியிருந்த வேளை பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் தங்கள் அணியினரும் தலைவரும் அசௌகரியங்களுக்கு ஆளானதாக அலையோசை விளையாட்டுக் கழகம சார்பாக கருத்துரைத்த மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமற்ற நடைமுறை
இந்த போட்டியானது அழைக்கப்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டி என்பதால் போட்டிக்கான நேர ஒழுங்குகள் தயாரிக்கப்படல் வேண்டும்.
அணியில் கலந்து கொள்ளவுள்ள வீரர்களின் தகவல்களை சேகரித்து விளையாட முடியாத வீரர்கள் தொடர்பான விபரங்களை முன்கூட்டியே அந்த அணிக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
போட்டிக்கான நேர ஒழுங்குகள் செய்யப்பட்டு எந்த அணி எந்த அணியோடு போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்துச் செயற்பட்ட செந்தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கு அணி வீரர்கள் தொடர்பில் முன்னரே கவனமெடுக்க முடியாதது ஏன் என விளையாட்டு இரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சிறந்த நிர்வாக கட்டமைப்புள்ள விளையாட்டுக் கழகம் விளையாட்டு வீரர்கள் தொடர்பில் விளையாடுவதற்கு அனுமதி வழங்குதல் அல்லது வழங்காமை தொடர்பிலான எண்ணக்கருவைக் கொண்டிருக்கும் எனின் போட்டியிடும் அணிகளுக்கிடையில் விளையாடுவதற்காக தெரிவாகும் வீரர்களின் விளையாடுவதற்கான அனுமதிகள் தொடர்பில் கவனமெடுத்து அவற்றை போட்டிக்கு முன்னரே சீர் செய்திருக்க வேண்டும்.
அறிவுறுத்தல் இல்லை
அலையோசை விளையாட்டுக் கழகத்திற்கு அதன் அணி வீரர்கள் ஐவர் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட முறையில் எழுத்து மூலமாக எந்தவொரு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை என அவ்வணி சார்ந்த உயர்மட்டக் குழுவினரின் சார்பில் பேசிய ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.
போட்டி அணிக்காக வீரர்களைத் தெரிவு செய்யும் போது சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.போட்டி நடைபெறும் தினத்தில் வந்து ஐவர் விளையாட முடியாது என்று அறுவுறுத்துவது நாகரிகமற்ற செயற்பாடு என இது தொடர்பில் விளையாட்டுக்களின் தன் இளமைக்காலத்தினை அதிகளவில் பயன்படுத்தியிருந்த வயோதிபர் ஒருவருடனான கலந்துரையாடலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
திறமையான விளையாட்டு வீரர்களின் மன எழுச்சியை சிதைக்கும் வகையில் கழகங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கும் போது வளமான உதைபந்தாட்ட ஆளணியை முல்லைத்தீவு மாவட்ட அணிக்குள் உள்ளீர்க்க முடியாத சூழல் தோன்றுவதை தடுக்க முடியாது என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |