யாழ்.காரைநகர் சிற்றூர்தி சங்கத்தினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
யாழ். காரைநகர் சிற்றூர்தி உரிமையாளர்கள் சங்கத்தினை புறக்கணித்து யாழ்.மாவட்ட வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்.மாவட்ட தனியார் பேருந்து பொறுப்பதிகாரி செயற்படுவதாக காரைநகர் சிற்றூர்தி சங்கத்தின் பேருந்து உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது குறித்து காரைநகர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவிக்கையில், ''நாங்கள் 1982 ஆம் ஆண்டில் இருந்து எமது எல்லைக்குட்பட்ட காரைநகர் மூளாய் சுழிபுரம் உரிமையாளர்களுடன் திறம்பட இயங்கி வரும் ஓர் நிரந்தர கட்டிடம் உள்ள சங்கமாகும்.
சங்கத்தின் வளர்ச்சி
எமக்குள் வரும் பிரச்சினைகளை நாமே இலகுவாக தீர்த்து வைத்து விடுவோம். தற்போது ND 0172 பேருந்து உரிமையாளர் பேருந்தின் அனுமதி பத்திரத்தை தனது உறவினர் இல்லாத ஒருவருக்கு பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
இதுவரை காலமும் எமது சங்க சிபாரிசு கடிதத்தை எமது தாய் சங்கமான யாழ் மாவட்ட கூட்டிணைக்கபட்ட தனியார் பேருந்து நிறுவனங்களின் இணையத்தில் ஒப்படைத்து அவர்களுடைய மேலதிக சிபாரிசின் படி எங்களிடம் இறுதி முடிவு எடுப்பதற்கு அந்த கடிதம் வந்து சேரும்.
இந்த நிலைப்பாடானது எதிர்கால நிர்வாக செயற்பாட்டிற்கு நன்மை தரக்கூடிய விடயமாக நாம் கருதி இருந்தோம் ஆகவே எமது இந்த நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்து எமது சங்கத்தின் வளர்ச்சிக்காக பொறுப்பு வாயந்தவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்நிலையில் எமது யாழ். மாவட்ட மற்றும் காரைநகர் பிரதேச சிற்றூர்தி சங்கத்திற்கும் அறிவிக்காது அண்மையில் எமது வழிதடத்தினை சாராத ஒருவருக்கு பேருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் எமது சங்கத்திலும் பதிவு செய்யபட்டவர் அல்ல இதேவேளை எமது சங்கத்திற்கும் எதுவித முன்னறிவித்தலும் பேரூந்து உரிமையாளராலும் வழங்கப்படவில்லை.
சாதக நிலை
ஆகவே, சுமார் 32 வருடத்திற்கு மேலான வழமையை மாற்றியுள்ளனர். சங்கத்தில் உறுப்பினர் இல்லாத ஒருவரை எம்மோடு கலந்துரையாடாது அவருக்கென தனியான நேர அட்டவணை மற்றும் நேர முகாமையாளரை கடமையில் ஈடுபடுத்தி சேவையினை நடாத்தவுள்ளதாக யாழ். மாவட்ட வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பேருந்து நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கடந்த நவம்பர் மாதமே பயணிகள் போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பொறுப்பு சார் அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தியும் எதுவித சாதக நிலைகளும் முன்னெடுக்கபடவில்லை‘ எனவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து யாழ் மாவட்ட வீதிப்பயணிகள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பேருந்து சாலையின் முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவிய போது, ‘பயணிகள் போக்குவரத்து அதிகார சபையே வழித்தட அனுமதியினை வழங்குகின்றது. அதன் பின்னர் குறித்த வழித்தட பேருந்து உரிமையாளர்கள் இணைந்து சங்கமாகின்றார்கள்.
இந்நிலையில் தமக்கு தெரியாது ஒருவர் பேருந்து விற்பனை செய்த நிலையில் பேருந்தினை ஓட விட முடியாது என அவர்கள் சொல்ல முடியாது. ஐந்து நாட்களினுள் குறித்த பேருந்து சேவையினை நடாத்த நடவடிக்கை எடுப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |