மகிந்த ராஜபக்சவின் மேடையில் தவறுதலாக நாமல் ராஜபக்சவை திருடன் என கோசமிட்ட மக்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும், அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று கோஷமிட முயன்று, இறுதியில் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வின் வெளிப்பாடு "நாமல் திருடன்" என்று கோஷமிட்டனர் என மக்கள் சக்தி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13.09.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். நாட்டின் பொதுச் சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களைச் சூறையாடி, அத்தகைய குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அல்லது பிணையில் வெளியே இருக்கும் நபர்களே இந்தப் பேரணியில் முன்னின்று வழிநடத்தியுள்ளனர்.
பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட மக்கள்
வறுமை, போதிய கல்வியறிவு மற்றும் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட அப்பாவி மக்களை, மதுபானம் மற்றும் உணவுப் பொதிகளை வழங்கி பேருந்துகள் மூலம் அழைத்து வந்து, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாபகரமான நிலையையே இந்தப் பேரணி வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பேரணியின் போது எதிர்த்தரப்பினர் 'அநுர திருடன்' என்று கோஷமிட முயன்று, இறுதியில் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த உணர்வின் வெளிப்பாடாக "நாமல் திருடன்" என்று கோஷமிட்டனர்.

2022ஆம் ஆண்டில் அரச குடும்ப ஆட்சியை எதிர்த்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வெற்றி பெற்ற நிலையிலும், மீண்டும் இந்தப் பேரணியில் ராஜபக்சக்களை மகாராஜாவாகப் போற்றி வழிபாட்டு மனநிலையுடன் அழைத்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிந்தது.
ராஜபக்ச குடும்பமும் அவர்களைச் சார்ந்தவர்களும் தங்களது அரசியல் மேலாதிக்கத்தையும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களது பாதுகாப்பையும் தக்கவைத்துக்கொள்ள அமைத்துக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகவே இது இயங்குகின்றது.
கடந்த காலங்களில் ராஜபக்சக்களுடனும், நாமல் ராஜபக்சவுடனும் இனி ஒருபோதும் இணையப்போவதில்லை என்று சபதம் செய்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்ற சுயநல அரசியல்வாதிகள், தற்போது மீண்டும் அதே மேடையில் ஏறியுள்ளனர்.
அரசியல்வாதிகளின் போலிப் பேச்சுகள்
தங்களின் சுயலாபத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப சில வினாடிகளில் தர்க்கங்களையும் நிலைப்பாடுகளையும் மாற்றிக்கொள்ளும் இத்தகைய அரசியல்வாதிகளின் போலிப் பேச்சுகளை மக்கள் மீண்டும் கேட்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழல் உருவாகியுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உரைகளிலும் நடவடிக்கைகளிலும் பிரபாகரனையும் தமிழ் ஆயுதப் போராட்டத்தையுமே தனது அடையாளமாகக் காட்ட முயல்பவர் ஆவார். ஆனால், அவரும் தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பேசும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோருடன் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்த காட்சி இவர்களின் போலி அரசியலை வெளிப்படுத்தியது.
ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள பௌத்த தேசியவாதத்தைக் காட்டி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், தங்களுக்கு ஆதரவாகச் செயற்படும் பட்சத்தில் எந்தவொரு நபரும் உடனடியாகத் தேசப்பற்றாளராக மாறிவிடுவர் என்ற ராஜபக்சக்களின் சுயநல சூத்திரத்தையே இது மீண்டும் நிரூபித்துள்ளது.

நாட்டில் தற்போதைய அரசின் பயணத்தைக் விமர்சிக்கக் கூடிய ஒரு ஜனநாயக எதிர்க்கட்சி அவசியமானது என்றாலும், அந்த எதிர்க்கட்சி எத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
2029 ஆம் ஆண்டை நோக்கிய எதிர்கால அரசியல் களமானது இனவாதத்துக்கு எதிரான, மக்கள் நலன் மற்றும் ஜனநாயக அடிப்படையிலான தேசிய மக்கள் சக்தி தலைமையிலான பிரிவு என்றும், பழைய கொள்கைகளையும், ஊழலையும், தீவிர இனவாதத்தையும் காப்பாற்றி சட்டத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக ஒன்றிணைந்துள்ள பிற்போக்கு அரசியல்வாதிகளின் பிரிவு என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரியப்போவது உறுதியாகியுள்ளது.
எனவே, இலங்கை மக்கள் மீண்டும் பழைய ஊழல் முறைமைக்குத் திரும்புவதா அல்லது ஜனநாயக வழியிலான புதிய அரசியல் மாற்ற எதிர்காலத்தைத் தேர்ந்தெடுப்பதா என்பதை நாட்டின் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே 23 மணி நேரம் முன்
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
லண்டனில் இருந்து சரக்கு விமானத்தில் ரகசியமாக வெளியேற்றப்பட்ட அமெரிக்க தூதர்: அவரின் பின்னணி News Lankasri