யாழ். மற்றும் வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் கவனயீர்புப் போராட்டம் (Photos)
புதிய இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (2.11.2023) மதியம் 12 மணியளவில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக செய்திகள்: தீபன்
வவுனியா
வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் இன்றையதினம் (2.11.2023) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
ஆறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடு பூராகவும் அடையாள வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு 40% சம்பள உயர்வு கிடைக்க வழி வழி செய், அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தயார் செய், ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு விதிக்கப்பட்ட வரிகளை திரும்ப பெறு.
மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா
பணியிடங்களை உடனடியாக நிரப்பு, தேசிய பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்க,
பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள இழப்பை தடுக்க வழி செய் போன்ற ஆறு அம்ச
கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்: திலீபன்
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இன்று (02.11.2023) சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை உள்ளடக்கி குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
வரிவிதிப்பு
நேற்றைய தினம் (01) நாவலவிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் என்பன இணைந்து நடாத்திய கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரிவிதிப்பு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரிக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்த பேரணியில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றிருந்தது.