தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி! நாடாளுமன்றில் வெளியான தகவல்
ஜனாதிபதி அலி சப்ரியின் பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் அவர் தொடர்ந்தும் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பில் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதன்போதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 3ஆம் திகதி அமைச்சரவையைச் சேர்ந்த சகல அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர்.
இதனையடுத்து, 4ஆம் திகதி புதிதாக நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், அவர்களில் முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
எனினும் கடந்த 5ஆம் திகதி நிதியமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஒருபோதும் அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிதியமைச்சர் என்ற வகையில் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு நிமித்தம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சுகாதார அமைச்சு கோரியிருந்த நிதியை நேற்று திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் விநியோகம் தொடர்பிலும் அரசாங்கம் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக செஹான் சேமசிங்க கூறியுள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
