ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிரடி நடவடிக்கை
இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதி, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை தன்மையை மேம்படுத்தும் நோக்கில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகளை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மாற்றங்களுக்கான குழுவின் (Transformation Committee) உறுப்பினரான சிதத் வெத்திமுனி ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்டத்தின் மீதான வீரர்களின் முழு கவனம்
வீரர்கள் ஆட்டத்தின் மீது முழு கவனம் செலுத்துவதையும் ஒழுக்க கட்டுப்பாட்டை மீறாமல் இருப்பதையும் உறுதிசெய்ய, இனிவரும் நாட்களில் அவர்களுக்கு மத்தியில் திடீரென மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் (Random alcohol & drug testing) மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் உடல் கொழுப்பின் அளவை கண்காணிக்க வாரந்தோறும் தோல் மடிப்புப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வீரர்களின் உணவுப்பழக்கம் பெரும் கவலையளிப்பதாக தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேரி கிறிஸ்டன் சுட்டிக்காட்டியதையடுத்து, உள்நாட்டிலும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போதும் வீரர்களின் உணவுகளை கண்காணிக்க உணவு நிபுணர் (Dietician) ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்கள்
வீரர்கள் தங்கும் விடுதிகளுக்கு நேரடியாக உணவு கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்ட உணவு முறையே வழங்கப்படுகிறதா என்பது உறுதி செய்யப்படுகிறது.

எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராகும் வீரர்களுக்கும் இதே கடுமையான உடற்தகுதி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.
புகைபிடித்தல், மது அருந்துதல், ஊட்டச்சத்து மற்றும் தொழில்முறை நடத்தை குறித்து வீரர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவித்த சித்தத் வெத்திமுனி, சர்வதேச அளவில் சீரான திறனை வெளிப்படுத்தவே இந்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.