அளம்பில் யாழ்.வீதியின் புனரமைப்பு: அதிருப்தியில் மக்கள்
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் யாழ். வீதி என மக்களால் அழைக்கப்படும் வீதியின் புனரமைப்புத் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தியினை வெளியிடுகின்றனர்.
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தினை அடுத்ததாக மேற்குப் பக்கமாக ஆரம்பிக்கும் இணைப்பு வீதி தான் மக்களால் யாழ் வீதி என அழைக்கப்படுகிறது.
பிரதான வீதியில் இருந்து இருபத்தைந்து மீற்றரிலும் சற்றுக்கூடிய நீளத்திற்கு தார் வீதி அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
மக்களிடையே அதிருப்தி
கருங்கற்சல்லிக்கற்கள் மீது ஊற்றப்பட்ட தாரின் அளவு போதியளவில் இல்லாமையால் சல்லிக்கற்கள் வீதியில் பரம்பிக் கொண்டிருக்கின்றன. இறுக்கமற்ற சல்லிக்கற்கள் விரைவில் வீதியில் இருந்து அள்ளுப்பட்டு வீதி பள்ளமாகிப் போகும் நிலை தோன்றி விடும் என மக்களிடையே அதிருப்தி இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
வீதியின் ஓரமாக அடுக்கப்பட்டுள்ள புற்கத்தைகள் காய்ந்து போய் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.அவற்றுக்கு ஆரம்பத்திலேனும் நீரூற்றி வளர்வதற்கான ஏதுக்களை ஆக்கியிருக்க வேண்டும்.எனினும் அதில் ஏற்பாட்டாளர்கள் கவனமெடுத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திட்டமிடலுக்கேற்ப செயற்படும் போது செய்வன திருந்தச் செய் என செயற்பாட்டிருக்கலாம்.
வீணாக்கும் முயற்சி
முதலீடு மற்றும் செயற்பாட்டு முயற்சிக்கான நேரம் என அனைத்தையும் வீணாக்கும் முயற்சியாக இத்தகைய சீரற்ற பாதையமைப்புக்கள் அமைந்துவிடுகின்றன.
இது தொடர்பில் உரிய செயற்பாட்டாளர்கள் இனி வரும் காலங்களில் கவனமெடுக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |