பொது சேவை அதிகாரிகளுக்கு ஹரிணி வலியுறுத்தியுள்ள விடயம்
நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது, பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று (11) இடம்பெற்ற விசேட கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வி முறை
மேலும் தெரிவித்துள்ளதாவது, ”கல்வி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அறிவைப் பெறுவதற்கு அப்பால், தனிப்பட்ட மற்றும் ஒரு கூட்டு மாற்றமாக சமூக மாற்றம் நிகழ வேண்டும்.
அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையை நாம் கொண்டிருக்க வேண்டும்.
சமூகப் பொறுப்பை உணர வேண்டும். தனிப்பட்ட ரீதியில் மட்டுமன்றி, ஒரு சமூகமாகவும் எழுச்சிபெற வேண்டும்.
நாம் கல்வியை ஒரு வர்த்தக பண்டமாக மாற்றியுள்ளோம். இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும். நாம் ஓரிரு வாரங்களில் முடிவுகளை எதிர்பார்த்து கல்வியில் முதலீடுகளை செய்யவில்லை. இது ஒரு நீண்ட கால முதலீடாகும். அந்த முதலீட்டை அரசாங்கம் செய்யும்.
இழுத்தடிப்புச் செய்வதாக குற்றச்சாட்டுகள்
கல்வி அமைச்சும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் இடமாக மாற வேண்டும்.
அந்தக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் கருணை இருக்க வேண்டும். சேவையை எதிர்பார்த்து வருபவர்கள் அழுதுகொண்டு செல்வதைப் பார்க்கிறோம்.
அதிகாரிகள் அவர்களுக்கு செவிசாய்ப்பதில்லை, சரியாக பேசுவதில்லை, கேள்வி கேட்டால் பதில் சொல்வதில்லை.
ஒரு விடயத்தை பல ஆண்டுகளாக இழுத்தடிப்புச் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த முறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |