மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார் அஜித் நிவாட் கப்ரால்
கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்றில் கிரேக்க பிணைமுறி முதலீடுகள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு எதிராக, கப்ரால் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேன்முறையீட்டு அனுமதி கோரும் மனு, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் பரிசீலனை செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பான மேல்நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்கிற்கு அமைவாக, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 200(1) பிரிவின் கீழ் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான உத்தரவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அஜித் நிவாட் கப்ரால் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
அதற்கமைய, இந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட காரணிகளை கருத்திற் கொண்ட நீதிபதிகள் குழாம், குறித்த மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்தது.
இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் ஒரு மேல்நீதிமன்ற நீதிபதியைக் கொண்ட அமர்வின் முன் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இருக்கையில், அதே குற்றச்சாட்டின் கீழ் மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கைத் தாக்கல் செய்து விசாரணையை முன்னெடுக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, கொழும்பு மூவர் கொண்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்து, அந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்து உத்தரவிடுமாறு மனுதாரரான அஜித் நிவாட் கப்ரால் உயர்நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.
மனுதாரர் அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க முன்னிலையானதுடன், லஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கனில் குலதுங்க முன்னிலையானர்.