விமான நிலைய ஊழியர்கள் அடையாள எதிர்ப்பு போராட்டம்
இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் இன்று அடையாள எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
2025ம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு (போனஸ்) கொடுப்பனவை உரிய முறையில் வழங்குமாறு கோரியே விமான சேவைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து மாத ஊதியத்தொகை போனஸ்
இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிலையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம, இந்த ஆண்டின் இறுதியில் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஐந்து மாத ஊதியத்தொகையை போனஸ் கொடுப்பனவாக வழங்குவதாக அறிவித்திருந்தார்.

எனினும் இதுவரை மூன்று மாத ஊதியமே போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே வாக்களிக்கப்பட்ட போனஸ் தொகையின் எஞ்சிய இரண்டு மாத ஊதியத் தொகையையும் தருமாறு இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனை முன்னிட்டு இன்று நண்பகல் நடைபெற்ற அடையாள எதிர்ப்பு நடவடிக்கையில் இலங்கை விமான சேவைகள் மற்றும் விமான நிலையத்தின் சகல ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.