போர் பதற்றத்தில் நாடாளுமன்றத்திற்கு பறந்த கடிதம் – சிக்கலில் அமெரிக்கா!
அமெரிக்காவில் கடந்த 29 நாட்களாக நீடித்து வரும் அரசாங்க முடக்கம் காரணமாக, விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 50,000 அதிகாரிகள் ஊதியம் ஏதுமின்றி பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எழுந்துள்ள நெருக்கடியைத் தீர்க்கக்கோரி அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு (Congress) உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அமெரிக்கன் எயார்லைன்ஸ், டெல்டா, யுனைடெட் மற்றும் சவுத்வெஸ்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் இணைந்து கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஊழியர்களுக்கு நேர்ந்த கதி
இந்தக் கடிதத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் சம்பளம் இன்றி வேலை செய்வதால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, விமான நிலையங்களில் பயணிகளின் வரிசை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக நீளமாகவும், மெதுவாகவும் நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வசந்த கால விடுமுறை காலத்தையொட்டி, சுமார் 17.1 கோடி பயணிகள் விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த முடக்கம் விமானப் போக்குவரத்துத் துறையை முழுமையாக நிலைகுலையச் செய்யும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
குடியேற்றக் கொள்கைகளில் நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தான் இந்த நிலைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே, அரசியல் முரண்பாடுகளைத் தவிர்த்துவிட்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற அரசாங்க முடக்கங்கள் ஏற்பட்டாலும் அத்தியாவசியப் பணியாளர்களுக்குச் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டமியற்ற வேண்டும் என்றும் விமான நிறுவனத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.