அஹுன்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: இருவர் கைது
கொழும்பு - காலி பிரதான வீதியின் அஹுன்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (16.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய கொமாண்டோ உத்தியோகத்தர் சார்ஜென்ட் ஆவார் என தெரியவருகிறது.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் கைது
குறித்த சந்தேகநபர் இந்த கொலை சம்பவத்திற்கு T56 துப்பாக்கியை வழங்கியவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
உதவி செய்த சந்தேகநபர் கைது
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு மேகதன்ன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இன்னொருவரும் உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் சந்தேக நபர் கடந்த 15ஆம் திகதி விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



