வயலோடு தென்னைகளையும் இழந்த முன்னாள் போராளி: மனதால் துவண்டு போன துயரம்
வாழை, தென்னை, வயல் என வாழ்வாதாரத்திற்காக பயிரிட்டிருந்தவற்றை இழந்து மனமுடைந்து நிற்கின்றார் முன்னாள் போராளியொருவர்.
ஒரு ஏக்கர் வயலை முற்றாக மேய்ந்து சென்ற யானைகளால் வீட்டு வளவினுள் இருந்த தென்னைகளும் வாழைகளும் இளம் தென்னம் கன்றுகளும் நாசம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
ஒட்டுசுட்டான் பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகளால் மனித வாழிடங்களும் பயிர்ச் செய்கைகளும் அதிகமாக நாசமாக்கப்பட்டுக் கொண்டு நாட்கள் கடக்கின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும்.
முன்னாள் போராளியின் நிர்க்கதியான நிலை
ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு அண்மையில் மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ளது இந்த துயரை சுமந்த முன்னாள் போராளியின் வீடு.
வீதியின் எதிர்ப்புறம் பாதுகாக்கப்பட்ட வனமான கூழாமுறிப்பு B பெருங்காடு இருக்கின்றது. அந்த காட்டிலிருந்து வந்திருந்த யானைக் கூட்டம் வீதியைக் கடந்து வயல் நிலங்களுக்குள் வேலியை உடைத்துக்கொண்டு உள் நுழைந்துள்ளன.
ஒரு ஏக்கர் வயல் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை முற்றாக மேய்ந்து வயல் நிலத்தினை உளக்கி நாசமும் செய்துள்ளன.
அவை வீட்டுக்கு முன்னுள்ள தென்னைகளையும் ஒரு தொகுதி வாழைகளையும் அழித்துவிட்டன என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயன்தந்து கொண்டிருந்த தென்னை மரங்களையும் அவை அழித்துவிட்டன என்பதை பார்க்கும் போது தான் மனமுடைந்து போனதாக குறிப்பிட்டமையும் இங்கே நோக்கத்தக்கது.
முள்ளியவளையில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த அன்றைய நாள் இரவில் யானைகளின் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
காலையில் வீட்டுக்கு வந்து யானைகளை கலைக்கும் போது அந்த கூட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இருந்தன என மேலும் அவர் குறிப்பிட்டார்.
போராளியாக அவரது வாழ்வு
முன்னாள் போராளி என்பதால் தடுப்பிலும் இருந்து தன் உழைக்கும் காலத்தை இழந்து விட்டதாகவும் தொடர்ந்து முயன்று வளரத்துடிக்கும் தன் முயற்சியில் இப்போது யானைகளும் தொந்தரவு செய்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் போராளியான அவர் குறிப்பிட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் பதினேழு வருடங்கள் ஈழ விடுதலைப்போரில் பங்கெடுத்துள்ளார். போரின் இறுதிக் காலங்களில் விமானப்படையின் பணிகளில் கேணல் சங்கருடன் கடமையாற்றியதாக அவர் தனது பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் குட்டிசிறி மோட்டார் படையனியில் செயற்பட்டு பின்னர் விமானப்படையணியில் செயற்பட்டதாக அவருடன் பேசியதிலிருந்து அறிய முடிந்தது.
போரினால் நிறைய இழந்து விட்டேன்.இப்போது என் முயற்சிகளும் அழிக்கப்பட்டு நான் நிர்க்கதிக்கு உள்ளாகின்றேன். அன்று மக்களுக்காக போராடியவர்கள் இன்று தங்கள் வாழ்வுக்காக போராட வேண்டிய சூழலில் மக்கள் தங்கள் பாட்டில் வாழ்கின்றனர்.
எப்படி அப்படி அவர்களால் வாழ முடிகின்றது என தான் ஆச்சரியப்படுவதுண்டு என தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.
போற்றிப் புகழ வேண்டிய மனிதர்கள்
யானைகளிடம் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து விட்டு தவிக்கும் முன்னாள் போராளிக்கு ஆறுதல் சொல்லக்கூட இன்று யாரும் இல்லை என்ற நிலை இருக்கின்றதனை சுட்டிக் காட்ட வேண்டும்.
அவர் தனக்குத் தானே ஆறுதல் சொல்லி தன்னை மீட்டு மீண்டும் முன்னகர்த்தி செல்ல வேண்டும்.
பிள்ளைகளின் படிப்புக்காக அதிக நேரத்தை செலவிட விரும்பும் அவர் தன் பிள்ளைகள் யாதேனும் ஒரு நிபுணத்துவ படிப்பை முடித்து விட்டால் அவர்கள் யாரிடமும் தங்கியிருக்க வேண்டியிருக்காது.
என் பிள்ளைகளிடம் தான் இந்த சமூகம் தங்கியிருக்கும் என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார். மண்மீட்புக்காகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடியவர்கள்.
இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுத்திட வேண்டும் என்று அன்று அவர்கள் போராடினார்கள். அந்த போரில் உயிரை இழந்தவர்களை மாவீரர்கள் என்று போற்றிப் புகழ்ந்து தியாகங்களை கொண்டாடும் ஈழத்தமிழர்கள் முன்னாள் போராளிகளை மட்டும் அப்படி மதிப்பதில்லை என சமூகவிடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
செய் நன்றி பாராட்டுதல்
உண்மையில் இப்போது உயிரோடு இருக்கும் முன்னாள் போராளிகளும் போரில் இறந்து விட்ட இப்போது மாவீரர்களாக இருக்கின்றவர்களுக்கும் எந்தவொரு வேறுபாட்டினையும் பார்க்க முடியாது.
ஈழத்தமிழ் மக்கள் எல்லோரும் முன்னாள் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் தாங்கி வாழவைக்க முன் வந்திருக்க வேண்டும்.
அதுவே தான் செய் நன்றி பாராட்டுதலாக இருக்கும் என அவர் மேலும் விபரித்தார். எனினும் அந்த பண்பாடு இன்றுவரை ஈழத்தமிழரிடையே காணப்படுவதாக இல்லை.
இனிவரும் காலங்களிலும் கொஞ்சமேனும் கருத்திலெடுத்து பொது கட்டமைபாபொன்றினூடாக செயற்படுதல் வேண்டும்.
ஒரு சிறு முயற்சியாக முன்னாள் போராளிகளை தாங்கி வாழ முற்பட்ட போதும் அது முழுமை அடையவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உதவிகள் என்பது தேவையுடையோருக்கு சென்று சேர வேண்டும்.
தங்கள் உணர்வுகள் வழியில் மக்களின் நலன்களுக்காக போராட்ட வாழ்க்கையை வாழ்ந்த அவர்களைப் பார்த்து அவர்களது பிள்ளைகள் உங்களைப் பார்த்துக்கொள்ளாத இந்த மக்களுக்காகவா அன்று நீங்கள் போராடினீர்கள் என்ற கேட்டுவிட்டால் தலை கவிழ்வதை விட அவர்களிடம் இன்று வேறு எந்த பதில்களும் இருந்து விடப்போவதில்லை.
பல முறை யானைகளால் பதிக்கப்பட்ட அவரது விளைநிலங்களில் யானைகள் புகுந்து சேதமாக்குவதை தடுப்பதற்கு இதுவரை எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
வலியோடு தாயகப் பரப்பெங்கும் பல முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தேற்ற சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவை போதியளவில் இல்லை.
மனதால் துவண்டு போயுள்ள அவர்களுக்கு தாங்குதல் என்பது அவசியமான ஒன்று என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும் என சமூக அக்கறையுள்ள சில மனிதர்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |