முள்ளியவளையில் உணரப்பட்ட நுண்கலைக் கல்லூரியின் தேவை: கற்றலாளர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்
நுண்கலை கல்லூரி ஒன்றின் தேவை முள்ளியவளையில் உணரப்பட்டுள்ளது. உயர்தர கலைத்துறை மாணவர்களுக்கு இசைக் கருவிகளை கற்றுக் கொள்ளல் கட்டாயமாக்கப்பட்டுள்ள கல்வி முறையினால் கற்றலுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுக்கொடுக்கும் ஒரு மையமாக நுண்கலைக் கல்லூரிகள் அமையப்பெறுதல் வேண்டும் என கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
முள்ளியவளையில் சிறப்பாக இயங்கிய நுண்கலைக் கல்லூரி ஒன்று விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்த போதும் இப்போது இல்லை என்பது அதில் கல்வி கற்றவர்களின் ஆதங்கமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நுண்கலைக் கல்லூரிக்கான கட்டடங்கள் இல்லை
முள்ளியவளை நுண்கலைச் சங்கம் என்ற ஒன்று இயங்கு நிலையில் இருக்கின்றது. அதன் அங்கத்தவர்களாக முன்னணி இசை ஆசிரியர்களும் கலைத்துறையினரும் இருக்கின்றனர். ஆனபோதும் அதற்கான நிலையான கட்டடம் ஒன்று இல்லை என நுண்கலை சங்கத்தின் தலைவராக உள்ள சங்கீத பாட ஆசிரியை குறிப்பிட்டார்.
இசைக்கருவிகளை பாதுகாப்பாக வைத்து பேணுவதற்காக ஒரு இடம் தேவை. அதற்கான நிரந்தரமான கட்டடம் ஒன்று இருப்பின் அவற்றை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியும். உரிய பாதுகாப்பு முறைமைகள் தான் நீண்ட கால பாவனைக்கு உதவும்படி இசைக்கருவிகளை கையாள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இசைப் பயிற்சிகளை வழங்குவதற்கும் மாணவர்கள் கவனச் சிதறல் இல்லாது கற்றுக் கொள்வதற்கும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதற்கும் தனியான மையம் ஒன்று இருப்பதே இலகுவானதாக இருக்கும் என்பது அவர்களது எண்ணமான போதும் அது இதுவரை நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
முள்ளியவளையில் பல கட்டடங்கள் இருந்த போதும் அவை பயன்படுத்தபடாது வெறும் கட்டடங்களாகவே இருப்பதனை சுட்டிக்காட்டி அவற்றில் ஒன்றை பெற்று பயன்படுத்த முடியாதா என்ற கேள்விக்கு அவரது பதில் முள்ளியவளைச் சமூகத்தின் புரிதல்களை கேள்விக் குறியாக்கியது.
பொது மண்டபங்கள்,தனியார் வீடுகள்,கடைத்தொகுதிகள், வாசிகசாலைகள், பாடசாலைக் கட்டங்கள் என பல கட்டடங்கள் எந்த பயன்பாடுகளும் இல்லாது வெறுமனே கட்டடங்களாக மட்டுமே இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.பல கட்டடங்கள் கட்டப்பட்டது முதல் இதுவரை கட்டப்பட்ட நோக்கத்திற்காக ஒரு தடவை கூட பயன்படுத்தப்படவில்லை.
கட்டி முடிக்கப்பட்டது முதல் அவை அப்படியே பராமரிப்பற்று இருப்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது. முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் பழைய கட்டடத்தொகுதி ஒன்று நுண்கலைக்கல்லூரிக்கான பயிற்சிமையமாக செயற்படுத்தக் கூடிய இடமாக இருப்பதையும் சுட்டிக் காட்டலாம்.
இப்போது கலைமகள் பாடசாலை தன் புதிய கட்டத்தில் இயங்கி வருகின்றமையும் நோக்கத்தக்கது. சிலகாலம் இயங்கிய வாசிக சாலையொன்றின் கட்டிடமும் இருக்கின்றது.வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்டு இதுவரை குடியேறாத சில வீடுகளும் உள்ளன. பல பொது மண்டபங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடமும் ஏதோவொரு பொது அமைப்பினதாகவோ அல்லது தனியாருடையதாகவோ இருக்கும். அவர்களிடம் அந்த கட்டங்களைப் பயன்படுத்த அனுமதி கேட்கும் போது இரண்டு காரணங்களால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
01) கட்டங்களுக்கான வாடகை 02) தங்களுக்கு தேவை என அவர்கள் மறுத்து விட்டு தாங்களும் பயன்படுத்திக்கொள்ளாத போக்கு என விளக்கினார். மீள்குடியேற்றத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட நுண்கலைக் கல்லூரியின் செயற்பாடுகளை தண்ணீரூற்று சீ.சீ.பாடசாலையில் உள்ள கட்டிடங்களில் முன்னெடுத்து பின்னர் ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்தின் திருமண மண்டபத்தில் உள்ள ஒரு பகுதியில் முன்னெடுத்திருந்ததாகவும் அவற்றின் போது பெற்ற அனுபவங்களினடிப்படையில் நுண்கலைக்கல்லூரிக்கு நிரந்தரமான கட்டடத்தொகுதி ஒன்று தேவை என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப்போது நுண்கலைக்கல்லூரிக்கான கட்டடத்தினை அமைப்பதற்காக காணி ஒன்றை பெற்றுள்ள போதும் கட்டத்தினை அமைப்பதற்கு போதுமான நிதி இல்லாமையையும் அவர் எடுத்தியம்பியமையும் குறிப்பிடத்தக்கது.
முள்ளியவளை நுண்கலைக் கல்லூரியின் தோற்றம்
முள்ளியவளையில் நுண்கலைக் கல்லூரிக்கான தேவையினை உணர்ந்து அதற்கு முன்னுரிமையளித்து அதனை ஆரம்பித்தவர் விரிவுரையாளரான கண்ணதாசன் அவர்கள் ஆகும். இவர் யாழ் இராமநாதன் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றிவர். விடுதலைப்புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்துடன் சேர்ந்தியங்கிய அவர் கலைத் துறைக்காக அளப்பரிய சேவையினை ஆற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியின் விடுதிக் கட்டடம் ஒன்றினை நுண்கலைக்கல்லூரிக்கான மையமாக கொண்டு அது இயங்கியதாகவும் நுண்கலை கல்லூரியின் தோற்றம் பற்றி இப்போது முள்ளியவளை நுண்கலை சங்கத்தின் தலைவியாக செயற்பட்டுவரும் சாந்தி ஆசிரியை குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் உயர்தரத்தில் இசைக்கருவிகளை கற்றல் கட்டாயமாக்கப்படவில்லை.இப்போது உள்ள கல்விமுறையில் உயர்தர கலைத்துறையில் இசைக்கருவிகளை கற்றல் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதும் நுண்கலைக் கல்லூரியின் தேவை உரியமுறையில் பூர்த்தியாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட இசைக்கருவிகளைக் கொண்டு இப்போது பயிற்றுவிப்புக்கள் நடைபெறுவதாகவும் இசையார்வலர்களின் வீடுகளில் வைத்தே பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் ஒகன் பயிற்சியாசிரியர் ஒருவர் இதுபற்றிய தேடலின் போது தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டிருந்த இசைக்கருவிகளை சில மாதங்களின் பின்னர் அவர்கள் மீளவும் பெற்றுக்கொண்டு விட்டார்கள். இட வசதியின்மையால் இது நடைபெற்றிருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்
முள்ளியவளையில் உள்ள இசைத்துறை ஆற்றலாளர்களிடையே ஒற்றுமையில்லாததால் அவர்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் இடர்களை எதிர்கொள்வதாக சுட்டிக் காட்டப்படுவதும் நோக்கத்தக்கது.
மிருதங்கம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒரு சங்கீத ஆசிரியையின் வீட்டில் வைத்து பயிற்றுவிக்கும் போது அங்கு சென்ற மாணவிகள் குழுவொன்று அந்த பயிற்சியை முடித்துக்கொண்டு மற்றொரு இசைப் பயிற்சிக்காக இன்னொரு சங்கீத ஆசிரியையின் வீட்டில் பயிற்சிக்காக சென்ற போது விடயத்தை விசாரித்த ஆசிரியை அங்கு போனால் இங்கே வரவேண்டாம் என அறிவுறுத்தியதாக அது தொடர்பில் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த நிலை தொடராது இருப்பதே இசைத்துறையில் வளரத் துடிப்போருக்கு உதவியாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இசை ஆற்றலாளர்களிடையே புரிதல் இல்லாமை கவலையளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.கலைத்துறை ஆற்றல் உள்ளவர்களிடேயே முரண்பட்ட நிலை முள்ளியவளையில் இருப்பதனை எழுத்தாளர்கள் சிலருடனும் உரையாடியதிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திறமையுள்ளவர்களுக்கு களம் கொடுத்த விடுதலைப்புலிகள்
தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்ட இடங்களாக தண்ணீரூற்றும் முள்ளியவளையும் இருந்தது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் பல செயற்பாட்டு மையங்கள் இங்கே இருந்தன என்பதும் நோக்கத்தக்கது.
புலிகளின் குரல் வானொலியின் தலைமையகம் தண்ணீரூற்றில் இருந்ததும் அங்கிருந்து நீண்ட நாட்கள் வானொலிக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டதனையும் அந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருந்த அப்போது பாடசாலை மாணவனாக இருந்த ஒருவர் அதனை நினைவு கூர்ந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் கலைத்துறையில் திறமையானவர்கள் எல்லோரும் உள்ளீர்க்கப்பட்டு அவர்கள் தட்டிக் கொடுக்கப்பட்டதோடு அவர்களது ஆளுமைகள் விடுதலைப் போராட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தது.
தமிழ்கவி, புதுவை இரத்தினதுரை, நாவண்ணன், பஞ்சாஞ்சரம், பரந்தாமன், குட்டிக்கண்ணன், சாந்தன்,சிட்டு,நிறோயன் என இந்த பட்டியல் நீண்டு செல்லும் என்று கலைத்துறை முதுசமொருவரிடம் முள்ளியவளையில் நுண்கலைக்கல்லூரிக்கான தேவை பற்றி கலந்துரையாடிய போது இவற்றை நினைவுகூர்ந்தார்.
விடுதலைப்புலிகளின் செயற்பாட்டில் கலைத்துறையினரிடையே முரண்பாடுகள் நிலவியிருக்கவில்லை. அப்படியான முரண்பாடுகள் எவையேனும் தோன்றும் போது அவை உடனடியாகவே தீர்க்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார். மனிதர்களின் மனநிலையோடு தொடர்புடைய இசைத்துறையில் மனக்கசப்புக்களை ஏற்படுத்தும் நிகழ்வுகள் இல்லாத வளர்ச்சிப் போக்கு அவசியமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.