இலங்கையின் கமத்தொழில் வளர்ச்சிக்கு உதவ தயார் - சீனா முன்வைத்துள்ள புதிய திட்டம்
இலங்கையின் கமத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.
கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை நேற்றுமுன் தினம்(14.09.2026) சந்தித்துக் கலந்துரையாடி போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
காலநிலைகளை கண்டறியும் செயலி
கைபேசி செயலிகள் மூலம் பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் நிலைகளையும் அளவிட்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கியுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் ரகங்கள் மற்றும் வறண்ட, ஈரமான வானிலை நிலைகளுக்கு ஏற்ப நிலத்தை தயார்படுத்தும் தொழில்நுட்பமும் சீனாவிடம் உள்ளதாக சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத் துறை வளர்ச்சிக்கான திட்டம்
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்சந்திப்பில் கலந்துகொண்ட விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கைக்குத் தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசு வழங்கும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் ஏற்கனவே பங்களிப்பு செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.