அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்படுவதில் முட்டுக்கட்டை: நாளுக்கு நாள் மோசமடையும் எண்ணெய் வர்த்தகம்
அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போதைய சூழலில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் தூரத்தில் உள்ளதாக டெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் முகமது எஸ்லாமி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சந்தை மற்றும் அமெரிக்கப் பங்குச் சந்தை மீதான அழுத்தத்தைக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயன்று வரும் போதிலும், பேச்சுவார்த்தை மேசையின் நிஜ நிலவரம் ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டே உள்ளதாக தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கனவு காண்பதாகவும், ஆனால் அதற்குப் பகரமாக ஈரானுக்கு எந்த வித நிரந்தரப் பாதுகாப்பையும் அமெரிக்காவால் வழங்க முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாடியுள்ளார்.
மசகு எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், அந்நாட்டு அரசு நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பேராசிரியர் எஸ்லாமி கூறியுள்ளார்.

"ஈரான் தொடர்ந்து மசகு எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது ஈரானிய எண்ணெய் பெருமளவில் சீனாவிற்குச் செல்கிறது. அதற்கான தொகையை சீன அரசாங்கத்திடமிருந்தும், அந்நாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்தும் ஈரான் முறையாகப் பெற்று வருகிறது" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான தற்போதைய இராஜதந்திர நிலைமை மிகவும் பலவீனமாகவும், எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடிய சூழலிலும் உள்ளதாக சர்வதேச அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.