மகிந்தவின் மனைவிக்கு காத்திருக்கும் ஆபத்து! பிரான்ஸில் சிக்கிய ரகசியங்கள்
சமகால இலங்கை அரசியல் பரப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ள போதும், வெளிநாட்டு பயணம் ஒன்றுக்காக அரச நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ரணில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் கைது மற்றும் விளக்கமறியல்
எனினும் இதுவொரு திட்டமிட்ட வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவே ரணில் ஆதரவு குழுவினரினால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
வெளிநாட்டுக்கான அரச விஜயத்தின் போது, ரணில் விக்ரமசிங்க லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அவரின் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் அதற்காக சுமார் இரண்டு கோடி ரூபா அரச நிதி செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, நாளை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய விஜயம்..
இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி பிரான்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தனது தனிப்பட்ட விஜயத்திற்காக பெருந்தொகையான நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த ஆட்சியின் போது இந்த விடயம் பெரிதும் எதிர்க்கட்சியினர்களால் பேசப்பட்ட போதும், அது மூடிமறைக்கப்பட்டிருந்தது. தற்போது அவ்வாறான குற்றச்சாட்டு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில், ஷிரந்தியின் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.
2024ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோ வெசாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.
பிரான்ஸிற்கான விஜயத்தின் போது தனது உறவுக்கார பெண்ணான டேசி பொரஸ்ட் என்பவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அந்த விஜயத்திற்காக 2,508,0681.49 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.
ஷிரந்தி ராஜபக்ச உட்பட குழுவில் தூதுவ அதிகாரிகள் இருவரும் இருந்துள்ளனர். அவர்கள் நால்வருக்குமான அறை மற்றும் உணவுக் கட்டணமாக 16,175,465.76 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவர்கள் இந்த சுற்றுலா பயணத்திற்கு மேலதிகமாக தனிப்பட்ட பயணங்கள் சிலவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த அனைத்து தனிப்பட்ட பயணங்களுக்கான வாகன வசதிகள் பெற்றுக் கொள்ளும் போது அதி சொகுசு வாகனங்களையே பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக 7,593,061.56 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்ச தங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஹோட்டல், உலகிலேயே அதிகமான கட்டணம் செலுத்தப்படும் ஹோட்டலாகும். அங்கு கட்டணம் அதிகம் என்பதனால் பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி உட்பட பல பிரபலங்கள் இந்த ஹோட்டலில் தங்குவதனை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸிற்கான விஜயத்தின் போது ஷிரந்தி குழுவினர் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக நல்லாட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர, நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



