கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 31 வருடங்களுக்கு பின் மரண தண்டனை
நபர் ஒருவரை 31 வருடங்களுக்கு முன்னர் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று(10.10.2023) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மரண தண்டனை
1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீரந்திடிய பிரதேசத்தில் நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் குறித்த மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸார் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்து மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
அந்த வழக்கில் 3, 4 மற்றும் 5ஆம் பிரதிவாதிகளான வலகெதர, பல்லேகொடவைச் சேர்ந்த மல்முத்துகே தயாரத்ன எனப்படும் ஒலிவர், நாவுட்டுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த அனகிபுர ஆரியரத்ன என்ற லொக்கா, கிரியமத் கன்வான் பகுதியைச் சேர்ந்த கிரிமத்லக்க பெர்னாண்டோ என்றழைக்கப்படும் தர்மதிலக பெர்னாண்டோ ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் பிரதிவாதியான பேருவளை, கலவில பகுதியைச் சேர்ந்த ரத்னா என்ற அனகிபுர பிரேமதிலக என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் மூன்று இலட்சம் ரூபாய் நட்ட ஈடும் விதிக்கப்பட்டது.
மேற்படி நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, நாவுட்டுடுவ கீரந்திடிய பிரதேசத்தில் வைத்து கம்புகளால் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை வெலிப்பன்ன பொலிஸார் கைது செய்தனர்.



