வடக்கு மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் : பி.எஸ்.எம். சார்ள்ஸ்
வடக்கு மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டடம் திறக்கப்பட்டு 05 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று (29/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலதிக செலவுகள்
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , “மருத்துவ துறையினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தங்களின் சேவையை முன்னெடுத்து வருகின்றனர். அதேபோல சுகாதார அமைச்சின் செலவுகளுக்கே அதிகளவான நிதி தேவைப்படுகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இடப்பற்றாகுறை, கட்டட வசதியின்மை, ஆளணி பற்றாகுறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியிலேயே சேவைகளை வழங்க வேண்டியுள்ளது.
எனினும் மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து, வார இறுதி நாட்களில் நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதால் வைத்தியசாலை நிருவாகம் மேலதிக செலவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு இயலுமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.
உரிய சட்ட நடவடிக்கை
இதன்காரணமாக நோயாளர்களும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அவர்களின் குடும்பங்களை சார்ந்தவர்களும் சிரமப்படுகின்றனர். ஆகவே இந்த விடயம் தொடர்பில் மாகாண சுகாதார துறை நிர்வாகம் மிக இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
அதேபோல அரச நிறுவனங்களுக்குள் எவரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாது. இது தண்டனைக்குரிய குற்றம். நேற்று முன்தினம் யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொலிஸார் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
குறைகள் உரியவாறு சுட்டிக்காட்டப்பட வேண்டும். அந்த விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தவறுகள் திருத்தப்பட வேண்டும். அத்துடன் ஊடகங்களும் எங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கான சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
ஊடகங்கள் பொது மக்களின் விடயங்கள் தொடர்பாக பொறுப்புடன் செயற்படும் என நம்புகிறேன். விமர்சனங்கள் ஒவ்வொரு துறைசார்ந்தும் காணப்படுகின்றது. விமர்சனங்களைக்கண்டு மனம் தளராது அதனூடாக எமது தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |