ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஜுன் 4 வரை ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு, உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தடவையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உயர்நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான - கடந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஜனக்த சில்வா, தான் இந்த வழக்கில் இருந்து விலகுகின்றார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் ரிஷாத் தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசாவின் வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஷ்தி ஹபீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சட்டத்தரணி அமீர் அலி ஆகியோர் ஆஜராகினர்.
ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 153/2021 எனும் மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோருடன் தான் ஆஜராவதாக சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன நீதிமன்றுக்கு தெரிவித்தார்.
இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா முன்னிலையானார். இந் நிலையில் இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வேண்டும் என சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா குறிப்பிட்டார்.
இந்நிலையில் அதனை அனுமதித்த உயர் நீதிமன்றம் குறித்த இரு மனுக்கள் தொடர்பிலும் ஏதும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி அல்லது அதர்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு அறிவித்தது. அவ்வாறு ஆட்சேபனைகள் முன் வைக்கப்ப்ட்டால் அவை தொடர்பில் பதில் வாதங்களை முன் வைக்க மனுதாரர் தரப்புக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதக நீதியர்சர் ஜனக் டி சில்வா அறிவித்த நிலையில், குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி நீதியரசர் ஜனக் டி சில்வா இல்லாத நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் ஜூன் 4 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தர்விட்டது.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டி. பணிப்பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, தானே மனுதரராக முன்னின்று நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி.யின் பிரதான் பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. ஜயசேகர, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி. பணிப்பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல்ச் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், மனுதாரரான தான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியின் தலைவர் எனவும், 2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருவதாகவும், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் எந்த அடிப்படைகளும் இன்றி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரரான ரிஷாத், தனது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான குளோசஸ் எனும் செப்பு தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட விவகாரத்தில் தன் மீது விரல் நீட்டப்பட்டாலும், குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்களுடன் தனக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என ஆவணங்கலையும் இணைத்து ரிஷாத் பதியுதீன் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி தான் கைதுச் செய்யப்ப்ட்டதும், 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி வழங்கிய அனுமதியும் சட்டத்துக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி 12 (1, 12 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சமத்துவத்அரசியலமைப்பின்துக்கான உரிமை, 13 (1), 13 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படாமலும் இருப்பதர்கான உரிமை ஆகியன மீறப்பட்டுள்ளதாகவும் ,மனுதாரர் தனது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், சி.ஐ.டி. யில் தன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தர்வுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
அத்துடன் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்ட ஈட்டினை பிரதிவாதிகளிடம் இருந்து பெற்றுமாரும் ரிஷாத், தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றை கோரியுள்ளார்.
ரியாஜ் பதியுதீனுக்காக தானே மனுதாரராக நின்று சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தான் ( ரியாஜ்)2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் திகதி கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.
அத்துடன் அப்போது கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் சாட்சியங்கள் இல்லையென்ற அடிப்படையில் 2020ம் ஆண்டு செப்டம்பர்பர் மாதம் 29ம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வெள்ளவத்தையில் வைத்து தன்னை கைது செய்தமையும், அது தொடர்பில் தடுத்து வைத்துள்ளமையும் சட்ட விரோதமானது எனவும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அந்த செயர்பாடுகள் உள்ளதாகவும் ரியாஜ் பதியுதீன் சார்பிலான மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து, அதற்கு எதிராக இடைக்கால தடை உத்த்ர்வொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதன்படி 12 (1, 12 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய
சமத்துவ அரசியலமைப்பின் சரத்துக்கான உரிமை, 13 (1), 13 (2) ஆம் உறுப்புரைகளுக்கு
அமைய எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும்,
சித்திரவதைக்கு உள்ளாக்கப்படாமலும் இருப்பதற்கான உரிமை ஆகியன
மீறப்பட்டுள்ளதாகவும் அதற்காக 500 கோடி ரூபாவை பிரதிவாதிகளிடம் இருந்து நட்ட
ஈடாக பெற்று தருமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.