அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான ஆரம்ப செலவை செலுத்த தீர்மானம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் அடிப்படையில், இந்தியாவின் அதானி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப செலவுகளுக்காக இலங்கை 300-500 மில்லியனை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார அலகு கொள்வனவு விலை நிர்ணயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர், இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் திட்டங்களிலிருந்து விலகியது.
செலுத்தக்கூடிய மொத்த தொகை
இதனையடுத்து தமது திட்டங்களை செயற்படுத்துவதற்காக ஏற்பட்ட ஆரம்ப செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு நிறுவனம் கோரியிருந்தது.
இந்தநிலையில், சில செலவுகளுக்கான திருப்பிச் செலுத்துதலுக்கான சட்ட ஆலோசனை நேற்று பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி செலுத்தக்கூடிய மொத்த தொகை 300 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிசக்தி அனுமதிப்பத்திரத்திற்காக அதானி செலுத்திய பணம் எதுவாக இருந்தாலும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதில்லை என்றும் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
இருப்பினும், அடுத்த சில மாதங்களுக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் அதிகாரசபையின் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர், திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையின் சரியான தொகை தீர்மானிக்கப்படும்.
முன்னதாக,வடக்கு மாகாணத்தில் மன்னார் மற்றும் பூநகரி நகரங்களில் காற்றாலை மின்சார நிலையத் திட்டங்களை நிறுவனம் நிர்மாணிக்கவிருந்தது. இதற்காக 442 மில்லியன் ரூபாய் முதலீடு செய்வதற்கும் அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.




