“இலங்கையை பணத்தால் பிடித்துள்ள அதானி நிறுவனம்”
தமது பாடல் மூலம் இந்திய மக்களை இலங்கைப் பாடகி யோஹானி பிடித்துக்கொள்ள, இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையை பணத்தால் பிடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி (Hector Appuhamy) இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கையின் கௌரவத்தை உலகிற்கு எடுத்துச் சென்ற பாடகி யோஹானியின் ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் இடம்பெற்றது. அங்கு ஒரு பெரிய கூட்டம் நிறைந்திருந்தது. இதன்மூலம் அந்தப் பாடகியை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டதை புரிந்து கொள்ள முடிந்தது.
இந்திய மக்களை யோஹானி பிடித்துக்கொள்ள இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையை பணத்தால் பிடித்துள்ளது.
முன்னதாக, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் திட்டம் இருந்தது.தொழிற்சங்கம் மற்றும் பலரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. ஆனால் மேற்கு முனையம் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது.மற்றுமொரு பகுதி சீனாவிற்கு வழங்கப்படுகிறது.
அதானி நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் செயற்பாட்டையே செய்கிறது. இந்திய அதானி நிறுவனம் தனது துறைமுகங்கள் மூலம் மறு ஏற்றுமதியை செய்யவே முற்படுகிறது. பொருட்களை இறக்குமதி செய்து மற்றொரு நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்கிறது. இதனால் பாரிய இலாபங்களை அடைந்து கொள்கிறது.அதைத்தான் இந்திய அரசாங்கமும் செய்கிறது.
கொழும்பு துறைமுகம் இந்த நாட்டில் ஒரு மலர் தோட்டம் போன்றது. கொழும்பு துறைமுகம் ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாகும். அங்கு புதிய வருவாயை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் மூலோபாய பண்டமாற்றுத் துறைமுகமே கொழும்பு துறைமுகமாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒர் துறைமுகம். அதன்மூலம், இலாபங்களை குறிப்பாக அடைய முடியாது. எனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை சரிவில் இருந்து மீட்பதற்காகவே, அது நல்லாட்சியில் குத்தகைக்கு விடப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு முழுமையான வருமான ஆதாரமுண்டு. ஆகவே இன்று துறைமுகங்களை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வழங்கி துறைமுகங்களிலிருந்து கிடைக்கும் இலாபங்களை இல்லாமலாக்கும் செயற்பாடுகளை இன்றைய இலங்கை அரசாங்கம் செய்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri