கொழும்பு செட்டியார் தெருவில் பதற்றம் - இளைஞர்கள் மீதான விசாரணை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு
கொழும்பு - செட்டியார் தெருவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தின் தொடர்ச்சியாக, பொலிஸ் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் எந்தவித தடுத்து வைப்புகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை இன்று(27.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மீதான விசாரணைகள்
பாதிக்கப்பட்ட செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஆரம்பம் முதலே களம் இறங்கிய மக்கள் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இந்த விடயம் பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணியும் தொடர் விசாரணைகளும், கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி நகை திருட்டு விவகாரம் ஒன்றின் விசாரணைக்காக வந்த பொலிஸார், இளைஞர் ஒருவர் மீது முறையற்ற விதத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்தைத் நேரடியாக அவதானித்த செட்டியார் தெரு வர்த்தகர்களும், இளைஞர்களும் ஒன்றுகூடி பொலிஸாரின் நியாயமற்ற செயல்களை கண்டித்ததோடு, அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தனர்.
குறிப்பாக, செப்டம்பர் 24 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்னர், முறையற்ற விசாரணைகளும் தன்னிச்சையான கைதுகளும் இடம்பெற்று வந்தன.
இவ்வாறான நகர்வுகள் செட்டியார் தெரு இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
பிரதி அமைச்சருடன் வர்த்தகர்கள் இணைந்து கலந்துரையாடல்
இந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் கூட்டு முயற்சியின் பயனாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இணைந்து, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கே. டி. குருசுவாமி, பழ.புஷ்பநாதன், தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ஸ்ரீகாந்த் அதன் அமைப்பாளர் சிவானந்தராஜா, சட்டத்தரணி ஹெரோசன் குமார் ஆகியோர்களுடன் செட்டியார் தெருவின் ஒரு சில வர்த்தக பிரமுகர்கள் சில கூட்டு முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் புறக்கோட்டை பொலிஸ் அதிகாரிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடப்பட்டு, எதிகாலத்தில் தேவையற்ற விதமான கைதுகள், நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
விதிமுறை மீறல்களுடன் தன்னிச்சையாகக் கைது செய்வதோ, தடுத்து வைப்பதோ அல்லது விசாரிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஓரிரு தினங்களில் இடம்பெற்ற விசாரணைகள் மற்றும் கைதுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து, இந்த விவகாரத்திற்கு நிரந்தரமான சட்டபூர்வ தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், நாளை(28.09.2026) பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு ஒன்றும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.