மட்டக்களப்பில் நடைபாதை வியாபாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை (PHOTOS)
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரின் பிரதான பொதுச்சந்தை கட்டிட தொகுதியில் புனரமைக்கப்பட்ட சந்தைத்தொகுதி இன்று திறந்துவைக்கப்பட்டது.
இதுவரையில் பொதுச்சந்தையின் மேல்மாடி பகுதியில் இயங்கிவந்த மீன்சந்தை மற்றும் இறைச்சி கடைகள் பொதுச்சந்தையின் கீழ் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.சந்தைக்கு வரும் மக்களின் நன்மை கருதியும் வியாபாரிகளின் நன்மை கருதியும் இந்த நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்துள்ளது.
உலக வங்கி நிதியுதவி
உலக வங்கியின் நிதியுதவியுடன் குறித்த மீன்சந்தை கட்டிட தொகுதி புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.
மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினர்கள்,மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
பொதுச்சந்தைக்கு வரும் முதியவர்கள் மற்றும் நோயாளர்களின் நன்மை கருதியும் நீண்டகாலமான மீன்வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் மீன் வியாபாரிகளும் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை முதல்வர் இதன்போது தெரிவித்தார்.
வீதியோர வியாபாரங்களினால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான விபத்துகள் நடைபெறுவதாகவும், இதன் காரணமாக வீதியோர வியாபாரங்களை பெருமளவில் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.



