தீர்வை வழங்க மறுக்கும் அரசாங்கம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு
காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நீதியை தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் எனவும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்றும் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இன்றைய தினம் (28) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,
''வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளோம்.
இலங்கை அரசாங்கமும் சரி சர்வதேசமும் எங்களை ஒரு தடவையாவது திரும்பி பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாத முடிவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடி வருகிறோம். ஆனால் எங்களை ஒருவருமே திரும்பி பார்ப்பதாக தெரியவில்லை.
எனினும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.
நீதிக்கான போராட்டம்
ஆனால் நீதிக்காக ஏங்கி போராடி வருகின்ற அம்மாக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சாட்சிகளும் மறைக்கப்பட்டு கொண்டு செல்கிறது.
அதனையே இந்த அரசும் விரும்புகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை (OMP) மாவட்ட ரீதியாக ஸ்தாபித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுகின்றனர். எமது உறவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசு இந்த பணத்தை வழங்குகின்றது” என தெரிவித்துள்ளனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |