பிபில - மகியங்கனை வீதியில் விபத்து: ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பிபில - மகியங்கனை வீதியின் ஏகே கட்டை பகுதியில் நேற்று (27.03.2026) இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி நேர்ந்த விபத்தில், 65 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மகியங்கனை திசையிலிருந்து வந்த கார், பிபில திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த கார்
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தையும் சுமார் 10 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று, அங்கிருந்த சிறிய கடையொன்றின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தால் வீதியோரத்தில் இருந்த பழக்கடையொன்று பலத்த சேதமடைந்ததுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்கள் அனைத்தும் வீதியெங்கும் சிதறிக் காணப்பட்டன.

ஒருவர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளின் சாரதியான 65 வயதுடைய முதியவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.