கர்ப்பிணித்தாய்க்கு நேர்ந்த விபரீதம் - கைதான சாரதியின் மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்
கிண்ணியா தள வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (25) இடம்பெற்ற வீதி விபத்தில் கர்ப்பிணித்தாய் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி
சீனக்குடா, வெள்ளமணல் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர், நேற்றைய தினம் மாதாந்த மருத்துவப் பரிசோதனைக்காக (கிளினிக்) கிண்ணியா தள வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

இதன்போது அவர் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக்கடவையின் (மஞ்சள் கோடு) ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பாதசாரிக் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த கர்ப்பிணித் தாய் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் காலில் பலத்த காயங்களுக்குள்ளான அவர், உடனடியாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சாரதியின் மருத்துவ பரிசோதனையில் வெளியான தகவல்
சம்பவம் தொடர்பாகக் கிண்ணியா வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் பொறுப்பதிகாரி ஏ.எம். முசம்மில் தெரிவிக்கையில், விபத்தை ஏற்படுத்திய சாரதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, இரத்த மாதிரி சட்ட மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி, விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த சாரதி 'கஞ்சா' போதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் கிண்ணியா றஹ்மானியா பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மேலதிக சட்ட நடவடிக்கைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு