மது போதையில் வாகனம் செலுத்திய கோடீஸ்வர வர்த்தகரால் ஏற்பட்ட விபரீதம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை விபத்திற்கு உள்ளாக்கிய கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக மது போதையில் சொகுசு காரில் பயணித்த குறித்த கோடீஸ்வர வர்த்தகர் விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மது போதையில் விபத்து
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 14 வயதுடைய மகள் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அளவுக்கு அதிகமாக மது போதையில் விபத்தை ஏற்படுத்திய கோடீஸ்வர தொழிலதிபர் காயம் அடைந்தவர்களை பற்றி கவலைப்படாமல் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டின் அருகே ஜீப்பை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்காக ஆனமடுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரது வீட்டுக்குச் சென்ற போது, பொலிஸாரின் கடமைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கோடீஸ்வர வர்த்தகர் கைது
ஆனால் எதிர்ப்பையும் மீறி கோடீஸ்வர வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுவாசப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதற்கும் அவர் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக தெரியவந்துள்ளது.
மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியமை, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரான வர்த்தகர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அங்கு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த ஆனமடுவ நீதவான் நிரோஷா பட்டபெந்திகோ சந்தேகநபரான வர்த்தகரை எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சந்தேகநபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.